அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்


அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 25 April 2022 11:57 PM IST (Updated: 25 April 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

நீர்நிலை புறம்போக்கில் உள்ள வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கியதால் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்
நீர்நிலை புறம்போக்கில் உள்ள வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கியதால் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
வீடு வழங்க வேண்டும்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருமுருகன்பூண்டி ஜே.ஜே.நகர், அணைப்புதூர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள்   நீர்நிலை பகுதியில் 140-க்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்தோம். இந்தநிலையில் பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை சார்பில் கடந்த 20-ந் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் நீர்நிலை புறம்போக்கில் உள்ள வீடுகளை 21 நாட்களுக்குள் காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர். வீடுகள் இல்லாமல் எங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அணைப்புதூர் வி.ஜி.வி.கார்டனில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள 224 வீடுகளில் எங்களுக்கும் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் அல்லது அரசுக்கு சொந்தமான இடத்தில் எங்களுக்கு பட்டா வழங்கி உதவ வேண்டும். அதுவரை வீடுகளை அகற்றாமல் காலஅவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
கருமாரம்பாளையம்
இதுபோல் திருமுருகன்பூண்டி அம்பேத்கர்காலனி பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘நீர் நிலை புறம்போக்கில் உள்ள தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு கூறியுள்ளதால் எங்களுக்கு வீடு வசதி அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவரை வீடுகளை இடிக்காமல் உரிய காலஅவகாசம் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் கருமாரம்பாளையம் பகுதியில் நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி குடியிருப்பவர்களும் தங்களுக்கு காலஅவகாசம் வழங்கி மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்
திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் டி.எஸ்.ஆர். லே அவுட் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘31-வது வார்டுக்கு உட்பட்ட கொங்கு மெயின் ரோடு டி.எஸ்.ஆர். லே அவுட் பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். மாநகராட்சி பள்ளிக்கூடம், பள்ளிவாசல், தேவாலயம், கோவில் அமைந்துள்ளன. 4-வது வீதியில் டாஸ்மாக் கடை பாருடன் செயல்படுகிறது. இங்கு ஏராளமானவர்கள் வருவதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பெண்கள், மாணவிகள் வீதியில் நடமாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட  டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Next Story