சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு
மதுரை அருகே சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சில ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
மதுரை,
மதுரை அருகே சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சில ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சரக்கு ரெயில் தடம் புரண்டது
சென்னை கடற்கரை ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் நிறுத்தி வைப்பதற்காக பணிமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்சார ரெயில் நேற்று முன்தினம் திடீரென்று பிளாட்பாரத்தை உடைத்துக்கொண்டு வெளியேறியது.
இந்தநிலையில் மற்றொரு சம்பவமாக மதுரையில் நேற்று சரக்கு ரெயில் ஒன்று தடம் புரண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து வடக்கு மண்டல ரெயில்வேக்கு சொந்தமான சரக்கு ரெயில், மதுரை வாடிப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் இருந்து டிராக்டர்கள் ஏற்றிச்செல்வதற்காக மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ரெயிலை டிரைவர்கள் விஷ்ணு மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் இயக்கினர். இந்த ரெயில் மதுரை அருகே கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து வந்த போது, மதியம் 12.45 மணியளவில் தண்டவாளங்களை இணைக்கும் பகுதியில் திடீரென்று தடம் புரண்டது.
அதாவது, ரெயில் என்ஜினில் இருந்து இணைக்கப்பட்டிருந்த 25-வது பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. பின்னர் சட்டென்று ரெயில் நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
தடம்புரண்ட அந்த பெட்டி (எண்.96614) இரட்டை அகலப்பாதையில், 2 தண்டவாளங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக சிக்கி நின்றது. இதனால், ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கோட்ட மேலாளர் பத்மநாபன், முதுநிலை கோட்ட என்ஜினீயர் (ஒருங்கிணைப்பு) முகைதீன், முதுநிலை மெக்கானிக்கல் என்ஜினீயர் சதீஷ் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த நேரத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை செல்வதற்காக மதுரையில் இருந்து புறப்பட்டு சென்றது. சரக்கு ரெயில் நடுவழியில் தடம் புரண்டு நின்றதால், குருவாயூர் எக்ஸ்பிரசும் நிறுத்தப்பட்டது. மற்றொரு என்ஜினை கொண்டு சென்று, அந்த ரெயிலின் பின்புறம் பொருத்தி மீண்டும் ரெயிலை மதுரை நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தேஜஸ் எக்ஸ்பிரஸ்
பின்னர், விபத்து மீட்பு கிரேன் ரெயில் புறப்பட்டு, மதியம் 2.10 மணிக்கு கூடல்நகர் சென்றடைந்தது. இதற்கிடையே, கோவையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சமயநல்லூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
தடம்புரண்ட ரெயில் பெட்டி மட்டும் கூடல்நகரில் நிறுத்தி வைக்கப்பட்டது. பிற பெட்டிளுடன் சரக்கு ரெயில் மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது. இந்த சம்பவத்தால், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 3 மணிக்கு சென்னை புறப்பட வேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து, தாமதமாக மாலை 3 மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றது.
பின்னர் சுமார் 40 நிமிட தாமதத்துக்குப்பின் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
விசாரணை
இதற்கிடையே, ரெயில் தடம்புரண்ட சம்பவத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா?அல்லது தண்டவாள பராமரிப்பு பிரிவு காரணமா? என்பது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story