தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
உடுமலை பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தளி
உடுமலை பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சாகுபடி பணிகளும் மும்முரம்
உடுமலை, தளி, அமராவதி சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் சுழற்சிமுறையில் கீரைகள், காய்கறிகளையும் நீர் இருப்புக்கு ஏற்றவாறு ஆண்டுப் பயிர்களையும், நீண்டகால பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் விவசாயிகளுக்கு கை கொடுத்து உதவி வருகிறது.
இதனால் சாகுபடி பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீராதாரங்களில் போதுமான அளவு நீர்இருப்பு உள்ளதால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வளர்ந்து விவசாயிகளுக்கு விளைச்சலை அளித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக உடுமலையின் சுற்றுப்புற பகுதியில் வெப்பச் சலனத்தின் காரணமாக சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
தக்காளி விளைச்சல்
இதனால் விளைநிலங்களும் ஈரப்பதத்திற்கு மாறி உள்ளதுடன் நீராதாரங்களும் கணிசமான அளவில் நீர்வரத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் பலத்த மழையின் காரணமாக உடுமலை பகுதியில் தக்காளி பழங்கள் வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நீண்டகால பயிர்களை காட்டிலும் குறைந்த செலவில் அன்றாட வருமானத்தை அளிக்கக்கூடிய காய்கறிகள் சாகுபடியிலேயே மும்முரமாக ஈடுபட்டு வருகின்றோம். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி சாகுபடி மேற்கொண்டோம். போதுமான அளவு தண்ணீர் இருந்தும் வெப்பத்தின் தாக்குதலால் செடிகள் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. இதனால் காய்ப்புத் திறனும் குறைவாகவே இருந்தது.
ஆனாலும் 15 கிலோ கொண்ட பெட்டி ஒன்று அதிகபட்சமாக ரூ. 100 முதல் 150 வரையில் மட்டுமே விற்பனையானது. இதனால் முதலீட்டு தொகையை கூட திரும்ப பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக கடந்த 10 நாட்களாக குறிப்பிட்ட இடைவெளியில் பலத்த மழை பெய்து வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதன் காரணமாக தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகி வருகிறது. இதனால் விளைச்சலும் பாதியாக குறைந்துவிட்டது. வரத்து குறைந்ததன் காரணமாக 15 கிலோ கொண்ட பெட்டி ஒன்று ரூ.400 முதல் 450 வரையிலும் தற்போது விற்பனையாகி வருகிறது.
பழங்கள் அழுகியதன் காரணமாக பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்றாலும் முதலீட்டு தொகையை திரும்பப் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story