கிருஷ்ணகிரியில் எருது விடும் விழா: மாடு முட்டியதில் ஒருவர் பலி 15 பேர் காயம்
கிருஷ்ணகிரியில் எருது விடும் விழா: மாடு முட்டியதில் ஒருவர் பலி 15 பேர் காயம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் ஒருவர் பலியானார். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதற்காக கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகளை அதன் உரிமையாளர்கள் வாகனத்தில் கொண்டு வந்தனர். முன்னதாக கோ பூஜை செய்யப்பட்டு, வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.
இந்த விழாவையொட்டி காளைகள் ஓடுவதற்காக இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. இந்த விழாவை காண கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தனர். இதில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒருவர் பலி
இந்த நிலையில் எருது விடும் விழாவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள மடவாளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 45) என்பவரை மாடு முட்டி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் எருது விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர். எருது விடும் விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story