கால்வாய்களை சீரமைத்து தண்ணீர் திறக்ககோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
கால்வாய்களை சீரமைத்து தண்ணீர் திறக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
கரூர்,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 402 மனுக்கள் பெறப்பட்டன.
பெரும் நஷ்டம்
கூட்டத்தில் கீழ்பவானி பாசன கடைமடை பாசன சபைகள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கடைமடை விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது பங்கீட்டு அளவு தண்ணீரை சரியாக பெறமுடியாமல் முறையாக பயிர் செய்ய இயலாமல் பெரும் நஷ்டம் அடைந்து வருகிறோம். தண்ணீர் திறப்பு செய்த பின் தலைப்பகுதியில் நடவு முடிந்து 45 நாட்கள் கழித்துத்தான் கடைமடை பகுதியில் நடவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் 120 நாட்கள் தண்ணீர்விடும் காலத்தில் எங்களால் நெல்பயிர் விளைச்சலை எடுக்க முடிவதில்லை.
இதற்காக மேலும் 15 நாட்கள் அதிகரித்து ஒவ்வொரு முறையும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகரிக்கப்படும் நாட்களுக்கான தண்ணீர் அடுத்த மண்டலத்தின் புன்செய் பாசன விவசாயிகளுக்கு உரிய பங்கீட்டு தண்ணீராகும். அணையிலிருந்து அதிகமான தண்ணீர் எடுக்கப்பட்டு விடுவதால் அடுத்த மண்டலத்தில் புன்செய் பாசனத்திற்கு போதிய நீர் வழங்குவது இல்லை. கடைமடை பகுதிகளில் எங்களுக்கு உரிய பங்கீட்டு தண்ணீரை பெற முடியாமல் புன்செய் விவசாயத்தையும் முழுமையாக செய்ய இயலாமல் துடித்து வருகிறோம்.
சீரமைப்பு பணிகள்
கடைமடைக்கு போதுமான தண்ணீர் போகிறது என்று பரப்புரை செய்து வருகின்றனர். இது முழுக்க முழுக்க தவறானதாகும். கடைமடை விவசாயிகள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில் தமிழக அரசு வருகிற ஏப்ரல் 30-ந்தேதி கால்வாயில் தண்ணீர் நிறுத்திய உடன் கிடைக்கின்ற 90 நாட்கள் கால இடைவெளியில் முதன்மை கால்வாயில் திட்டமிட்டபடி சீரமைப்பு பணிகளை தொடர்ந்து செய்து வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மணல் குவாரிக்கு அனுமதி
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரை ஓரம் மற்றும் ஆற்றில் உள்ள சுமார் 800 ஏக்கர் வனத்துறை நிலங்களை வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அடையாளமிட்டு காட்டிய பின்பே மணல் குவாரிக்கு அனுமதி தர வேண்டும். அவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story