கீரமங்கலத்தில் புதிய இடத்தில் மயானம் அமைத்து கொடுத்த அதிகாரிகள்


கீரமங்கலத்தில் புதிய இடத்தில் மயானம் அமைத்து கொடுத்த அதிகாரிகள்
x
தினத்தந்தி 26 April 2022 12:56 AM IST (Updated: 26 April 2022 12:56 AM IST)
t-max-icont-min-icon

புதிய இடத்தில் மயானம் அமைத்து அதிகாரிகள் கொடுத்தனர்.

கீரமங்கலம்:
கீரமங்கலம் மேற்கு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதி பொதுமக்களுக்காக பொது மயானம் உள்ளது. காலங்காலமாக அந்த மயானத்தில் இறந்தவர்களை தகனம் செய்து வருகின்றனர். ஆனால் அந்த மயானத்திற்கு செல்ல பொதுப்பாதை இல்லை என்பதால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் நிரந்தரமாக சாலை வசதி வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். போராட்டங்களும் நடந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் சாலை அமைப்பதாக சமாதானக் கூட்டத்தில் உறுதி அளிப்பதுடன் பிறகு அதற்கான முயற்சிகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பலர் சாலை அமைக்க நிலம் தர முன்வந்தும் கூட சாலை அமைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த முருகையன் மனைவி காந்திமதி (வயது 60) உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் சாலை வசதி ஏற்படுத்தப்படும் வரை இறந்தவர் உடலை தூக்கமாட்டோம், அல்லது குடியிருப்பில் உள்ள வீட்டின் அருகிலேயே அவரது சொந்த இடத்தில் தகனம் செய்வதாக உறவினர்கள் கூறியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், கீரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் மயானத்தை ஆய்வு செய்தனர். பலரது பட்டா நிலத்தில் சாலை அமைக்க வேண்டிய நிலை உள்ளதால் உடனடியாக தீர்வு எட்டாது. அதனால் அரசுக்கு சொந்தமான கால்வாய்க் கரையில் சாலை வசதி உள்ளதால் அந்த இடத்தில் புதிய மயானம் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக மயானம் அமைத்துக் கொடுத்தனர். அதன் பிறகு சடலம் மயானத்திற்கு தூக்கிச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. பல வருட பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுத்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி கூறினார்கள்.

Next Story