கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலச்சங்கத்தினர் மனு
கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
நெல்லை:
கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் நலச்சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். ஏராளமான பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
திராவிட தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், “இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள தனியார் ஆங்கில பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை எளிய வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள தனியார் பள்ளிகளின் முகவரிகள் இணையதளத்தில் வருவதில்லை. அந்த பள்ளிகளின் முகவரிகளை உடனே வெளியிட வேண்டும். இல்லையெனில் அந்த பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சார்பதிவாளர் அலுவலகம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட பொறுப்பாளர் மானூர் ராஜா, பொருளாளர் எம்.சி.சேகர் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘கங்கைகொண்டான் பகுதியில் செயல்பட்டு வந்த சார்பதிவாளர் அலுவலகத்தை மானூர் புறநகர் பகுதிக்கு இடமாற்றம் செய்வதாக கூறப்படுகிறது. எனவே அந்த சார்பதிவாளர் அலுவலகத்தை மானூர் நகர பகுதியில் அமைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.
நெல்லை மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத்தினர் தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் முத்துசாமி ஆகியோர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து வருகிற 29-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் கறிக்கோழி பண்ணையாளர்கள் ஈடுபட உள்ளோம்’’ என்று கூறியுள்ளனர்.
தர்ணா போராட்டம்
களக்காட்டைச் சேர்ந்த மேகலா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்துவளவனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தன்னை அவதூறாக பேசிய சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
அம்பை அருகே அடையகருங்குளத்தைச் சேர்ந்த சுகிர்த கலா தனது மகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.
Related Tags :
Next Story