தினசரி மார்க்கெட் இடமாற்றம் குறித்து நகராட்சி தலைவர்-வியாபாரிகள் பேச்சுவார்த்தை


தினசரி மார்க்கெட் இடமாற்றம் குறித்து நகராட்சி தலைவர்-வியாபாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 26 April 2022 2:06 AM IST (Updated: 26 April 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட் இடமாற்றம் குறித்து நகராட்சி தலைவர்-வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் ஒரே வளாகத்தில் தினசரி காய்கறி மார்க்கெட்டும், வாரச்சந்தையும் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆனால் தினசரி காய்கறி மார்க்கெட் போதிய வசதி இல்லாத காரணத்தினால் நகராட்சி நிர்வாகம் சுமார் 4 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து நவீனமாக்க ஏற்பாடு செய்தது.
இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் தினசரி மார்க்கெட் வியாபாரிகளிடம், தினசரி காய்கறி மார்க்கெட்டை நவீனப்படுத்த வசதியாக உங்கள் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். தற்காலிகமாக வாரச்சந்தையில் உங்கள் கடைகளை போட்டுக்கொள்ளுங்கள். வாரச்சந்தை நடைபெறும் செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் நீங்கள் உங்கள் கடைகளுக்கு விடுமுறை விட்டு விட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
இதையடுத்து நேற்று தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் நஞ்சையன், செயலாளர் கணேசன் மற்றும் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமியை சந்தித்து, ‘நாங்கள் வாரச்சந்தை நடைபெறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை விட்டால் பொருட்களை வைக்க சந்தையின் ஒரு பகுதியிலேயே கொட்டகை போட்டு கடைகள் அனைத்தும் இயங்க அமைத்து தரவேண்டும்.’ என்று கூறினர்.
அதற்கு நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி கூறும்போது, ‘காய்கறிகள் பொருட்களை வைக்க தனியாக கூடாரம் போட்டு தர ஏற்பாடு செய்து தருகிறோம். கடையில் வைக்க தனியாக கூடாரம் அமைக்க வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் செலவாகும். அதை செய்ய மாவட்ட அளவில் உள்ள மேல் அதிகாரிகள் அனுமதி பெற்று நிதி தான் ஒதுக்கீடு முடியும். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யலாம்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட அனைத்து சங்க நிர்வாகிகளும், வியாபாரிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.

Next Story