``மண் வாய்க்கால் மக்களுக்காக, கான்கிரீட் போடுவது கமிஷனுக்காக” அதிகாரிகள் மீது விவசாயிகள் கடும் குற்றச்சாட்டு


``மண் வாய்க்கால் மக்களுக்காக, கான்கிரீட் போடுவது கமிஷனுக்காக” அதிகாரிகள் மீது விவசாயிகள் கடும் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 April 2022 8:41 PM GMT (Updated: 25 April 2022 8:41 PM GMT)

கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மாநாட்டில் பேசிய விவசாயிகள் மண் வாய்க்கால் மக்களுக்காக, கான்கிரீட் போடுவது கமிஷனுக்காக என்று அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மாநாட்டில் பேசிய விவசாயிகள் மண் வாய்க்கால் மக்களுக்காக, கான்கிரீட் போடுவது கமிஷனுக்காக என்று அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
கோரிக்கை மாநாடு
ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசனம் வழங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையில் இருந்து வெட்டப்பட்டு உள்ள கீழ்பவானி வாய்க்கால் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் விளை நிலங்களுக்கும், பொதுமக்களுக்கும் நீராதார உயிர் நாடியாக இருக்கிறது.
சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் பிரதான வாய்க்கால்கள் கொண்ட கீழ்பவானி வாய்க்கால் மூலம் நேரடி பாசனம், மறைமுக பாசனம், கசிவு நீர் திட்ட பாசனம் என்று பல ஆயிரம் ஏக்கர் நிலம் இந்த திட்டத்தின் மூலம் பாசன வசதி பெறுகிறது. இந்தநிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான...
பின்னர் கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு என்ற பெயரில் ரூ.710 கோடி நபார்டு வங்கி கடன் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. இந்தநிலையில் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கீழ்பவானியில் கான்கிரீட் அமைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இயக்கங்கள் நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக விவசாயிகள் குடும்பத்தினருடன் பங்கேற்கும் விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழல் பாதுகாத்திட கீழ்பவானி பாசன கால்வாயின் கான்கிரீட் திட்டத்தை கைவிடக்கோரி கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று முன்தினம் நடந்தது. ஒரு நாள் நடந்த இந்த மாநாட்டில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
அதிகாரிகள்
இந்த மாநாட்டில் பேசிய விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை விளக்கியும், அதன் நியாயம் குறித்தும் பேசினார்கள். குறிப்பாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசும்போது கூறியதாவது:-
எந்த ஒரு விவசாயம் சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும் அங்கு விவசாயிகளை பிரித்து அவர்களை மோதவிட்டு அதிகாரிகள் தப்பித்துக்கொள்கிறார்கள். முறையான நீர் மேலாண்மையை செய்ய தெரியாத காரணத்தால் கடைமடைகளுக்கு தண்ணீர் செல்வது இல்லை. ஆனால், அதிகாரிகள் தங்கள் தவறை மறைக்க, விவசாயிகள் மீது பிரச்சினையை திசைதிருப்பி விடுகிறார்கள்.
மண் அணை இருந்தால் கடைமடைக்கு தண்ணீர் செல்லாது என்று கான்கிரீட் தளம் அமைக்கிறார்கள். இதில் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடையாது. பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் கசிவு மூலம் நீர் இழப்பு ஏற்படுவதாக கூறி முழுவதும் லைனிங் செய்தார்கள். ஆனால் இப்போது நீர் இழப்பு அதிகமாகி இருக்கிறது. கடைமடை விவசாயிகளுக்கு ஏற்கனவே கிடைத்த தண்ணீர் கூட கிடைக்கவில்லை. ஆனால், அதிகாரிகள் தங்கள் தவறை மறைக்க, விவசாயிகள் மீது பிரச்சினையை திசை திருப்புவார்கள். 
மண்வாய்க்கால்     மக்களுக்காக...
இதுபோலத்தான் கீழ்பவானியிலும் நடக்கும். காமராஜருக்கு தெரியாமலா மண்ணால் வாய்க்கால் அமைத்தார். பவானிசாகர் முழுவதும் மண்ணால் ஆன கரையை கொண்ட அணை. அங்கு எந்த உடைப்பும் இல்லையே. ஆனால், வாய்க்காலில் மட்டும் எப்படி உடைப்பு. அதிகாரிகள் சரியாக வாய்க்கால்களை பராமரிக்காததால்தான் இந்த உடைப்பு. ஆனால், அதை மறைத்து விட்டு மண் அணை இருந்தால் கசிவு வரும். கான்கிரீட் போட்டால் கடைமடைக்கும் தண்ணீர் வரும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், மண் அணை என்பது மக்களுக்காக, கான்கிரீட் போடுவது கமிஷனுக்காக. காசு வரும் என்றால் என்ன திட்டம் வேண்டும் என்றாலும் அதிகாரிகள் கொண்டு வருவார்கள். தண்ணீரை தனியார் நிறுவனத்தினர் திருடுவது அவர்களுக்கு தெரியும். ஆனால் விவசாயிகளை தந்திரமாக பிரித்தாள்வது அவர்களின் நோக்கம்.
அடுத்த தலைமுறை
விவசாயத்தை கூட அதிகார வர்க்கம் 3 ஆக பிரித்து வைத்திருக்கிறது. விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள், கருவிகள் விற்பனை செய்பவர்கள் ஒருபிரிவு. உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஒருபிரிவு. உற்பத்தி பொருட்களை வாங்கி விற்கும் அல்லது மதிப்பு கூட்டும் பணியை செய்யும் தொழில் செய்பவர்கள் ஒருபிரிவு. இதில் இடுபொருட்கள் விற்பனை செய்பவர்களும், மதிப்புக்கூட்டு தொழில் செய்பவர்களும் லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு பாலமாக இருக்கும் விவசாயிகள் மட்டும்தான் ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயம் செய்வது மற்றவர்களை வாழ வைக்க மட்டும்தான். நம்முடைய வாழ்வாதாரத்துக்காக விவசாயிகள் வேலை செய்வது இல்லை. எங்காவது விவசாயம் சார்ந்த பிற தொழில் செய்பவர்கள் தற்கொலை செய்வது இல்லை.
இப்போது நம்மிடம் இருப்பது நம் நிலம் மட்டும்தான். நிலத்தையும், சுற்றுச்சூழலையும், குடிநீரையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்.
இவ்வாறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசினார்கள்.

Next Story