டுவிட்டா் ஹேக் செய்திருப்பதுடன், மிரட்டல்களும் வருகிறது; முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே


டுவிட்டா் ஹேக் செய்திருப்பதுடன், மிரட்டல்களும் வருகிறது; முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே
x
தினத்தந்தி 26 April 2022 2:25 AM IST (Updated: 26 April 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு ஆடியோ வெளியிட்ட பின்பு தனது டுவிட்டரை ஹேக் செய்திருப்பதுடன், மிரட்டலும் வருவதாக முன்னாள் மந்திரியான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

  பெங்களூருவில் நேற்று முன்னாள் மந்திரியான பிரியங்க் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மிரட்டல் விடுவிக்கப்படுகிறது

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடு தொடா்பான ஆடியோவை நான் வெளியிட்டு இருந்தேன். இந்த ஆடியோவை வெளியிட்டதற்காக விசாரணைக்கு ஆஜராகும்படி சி.ஐ.டி. போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர். எதற்காக எனக்கு நோட்டீசு அனுப்பி வைக்க வேண்டும். விசாரணைக்கு அழைத்து எனக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். ஆடியோவை வெளியிட்ட பின்பு எனது டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

  எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி சில நபர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்படுபவன் நான் இல்லை. என்னை தனிப்பட்ட முறையில் டார்க்கெட் செய்வது எதற்காக என்று புரியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதன் மூலம் பல ஆயிரம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி இருக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு மட்டுமில்லாமல், பிற துறைகளிலும் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடக்கிறது.

திவ்யாவை ஏன் கைது செய்யவில்லை

  தொடர்ந்து 3 ஆண்டுகள் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். என்னிடம் இருக்கும் சாட்சி ஆதாரங்களை கொடுக்கும்படி மந்திரி அரக ஞானேந்திரா கூறி இருக்கிறார். முறைகேடு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அரசுக்கு கிடைக்கவில்லை. சமூக வலைதளங்களில் கூட முறைகேடு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசிடம் ஆவணங்கள் இல்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களே மந்திரி அரக ஞானேந்திராவை சந்தித்து பேசி இருக்கின்றனர்.

  மாநிலத்தில் சரியான போலீஸ் மந்திரி இல்லை என்று, அவரது கட்சியை சேர்ந்த யத்னால் எம்.எல்.ஏ.வே கூறி இருக்கிறார். மந்திரி அரக ஞானேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பா.ஜனதா பிரமுகரான திவ்யாவை ஏன் கைது செய்யவில்லை. அவரை தேடும் பணி ஏன் நடக்கவில்லை. அரசுக்கு எதிராக பேசியதால், விசாரணைக்கு ஆஜராகும்படி எனக்கு நோட்டீசு அனுப்புகிறார்கள். ஒரு மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன ஆகும்.
  இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

Next Story