அதிக பாரம் ஏற்றிச்சென்ற சரக்கு வாகனங்களுக்கு அபராதம்-வரி: போக்குவரத்துத்துறை நடவடிக்கை


அதிக பாரம் ஏற்றிச்சென்ற சரக்கு வாகனங்களுக்கு அபராதம்-வரி: போக்குவரத்துத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 26 April 2022 7:52 AM IST (Updated: 26 April 2022 7:52 AM IST)
t-max-icont-min-icon

அதிக பாரம் ஏற்றிச்சென்ற சரக்கு வாகனங்களுக்கு அபராதமும், வரியும் வசூலித்து போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை, 

சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச்செல்வதால் இதர வாகனங்களுக்கு சரக்கு கிடைக்காமல் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து போக்குவரத்து கமிஷனர் சி.நடராஜன் உத்தரவின்படி சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து கமிஷனர் அ.ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி கடந்த வாரம் செங்குன்றம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், அம்பத்தூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகபாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை சோதனை செய்து 44 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் மற்றும் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 370 வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.14 லட்சத்து 68 ஆயிரம் அபராதமும், ரூ.28 ஆயிரத்து 500 வரியும் நிர்ணயம் செய்யப்பட்டு போக்குவரத்துத்துறை மூலமாக வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 6 சரக்கு வாகனங்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

‘டாரஸ்’ வகை வாகனங்கள் அதிக பாரம் ஏற்றுவதற்கு வசதியாக வாகனத்தின் கட்டமைப்பை அனுமதியில்லாமல் சட்டத்துக்கு புறம்பாக வடிவமைத்து வாகனங்களை இயக்கக்கூடாது. தவறும் பட்சத்தில் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இக்குற்றங்கள் சரியாகும் வரை தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவல் சென்னை வடக்கு போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story