கூடலூர் பகுதியில் மீட்கப்பட்ட செந்நாய்- சிறுத்தைக்குட்டி வனத்தில் விடுவிப்பு


கூடலூர் பகுதியில் மீட்கப்பட்ட செந்நாய்- சிறுத்தைக்குட்டி வனத்தில் விடுவிப்பு
x
தினத்தந்தி 26 April 2022 7:12 PM IST (Updated: 26 April 2022 7:12 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் செந்நாய், சிறுத்தை புலி குட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனத்துறையினரால் வனப்பகுதியில் விடப்பட்டது.

கூடலூர்

கூடலூர் பகுதியில் செந்நாய், சிறுத்தை புலி குட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனத்துறையினரால் வனப்பகுதியில் விடப்பட்டது.

கிணற்றில் விழுந்த செந்நாய்

கூடலூர் வனக்கோட்டத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தை புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதில் காட்டு யானைகள் ஊருக்குள் அடிக்கடி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் தாலுகா தேவாலா அருகே பாண்டியாறு அரசு தேயிலைத்தோட்டம் ரேஞ்ச் எண். 5-ல் ஒரு கிணறு உள்ளது.
வழக்கம் போல் பச்சை தேயிலை பறிக்க தோட்ட தொழிலாளர்கள் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது கிணற்றுக்குள் சத்தம் கேட்டதால் உள்ளே எட்டி பார்த்தனர். அதில் செந்நாய் ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தேவாலா வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் ராம்குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

சிறுத்தைக் குட்டி

பின்னர் கயிறு மற்றும் வலை ஆகியவற்றின் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த செந்நாயை பல்வேறு கட்டமாக போராடி வனத்துறையினர் மீட்டனர். தொடர்ந்து தேயிலைத் தோட்டத்தில் செந்நாயை விட்டனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் செந்நாய் அங்கிருந்து ஓடி வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து செந்நாயை பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதேபோல் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட புழம்பட்டி பகுதியில் தேயிலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் பச்சை தேயிலை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே சத்தம் கேட்டது. இதனால் பெண் தொழிலாளர்கள் நேரில் சென்று பார்த்தனர். அங்கு பிறந்து ஒரு மாதம் மட்டுமே ஆன சிறுத்தை புலி குட்டி தாயைப் பிரிந்து தவித்துக் கொண்டிருப்பதை தோட்டத் தொழிலாளர்கள் கண்டனர்.

பாதுகாப்பாக விடுவிப்பு

இதுகுறித்து கூடலூர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து சிறுத்தை குட்டியை மீட்டனர். பின்னர் அதே பகுதியில் உள்ள சிறிய வனப்பகுதியில் சிறுத்தை குட்டியை வனத்துறையினர் விடுவித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தாய் சிறுத்தை அந்தப்பகுதியில் இருக்க வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறுத்தை குட்டியை அதே வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. குட்டியின் சத்தம்கேட்டு தாய் சிறுத்தை கண்டிப்பாக அழைத்து சென்றுவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story