கோத்தகிரி அருகே ஆதிவாசி கிராமப்பகுதியில் காட்டு யானைகள் முகாம்
கோத்தகிரி அருகே உள்ள கோழிக்கரை ஆதிவாசி கிராம குடியிருப்புப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள கோழிக்கரை ஆதிவாசி கிராம குடியிருப்புப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசுந்தீவன தட்டுப்பாடு
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் குஞ்சப்பனை ஊராட்சிக்கு உட்பட்ட கோழிக்கரை ஆதிவாசி கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக குஞ்சப்பனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு வனப்பகுதியில் இருந்த புல்வெளிகள் மற்றும் செடி, கொடிகள் எரிந்து நாசமானது. இதனால் வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.
காட்டு யானைகள் முகாம்
இந்தநிலையில் கோழிக்கரை கிராமப் பகுதிக்கு அருகே 2 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிக்குள் உலா வந்தவண்ணம் உள்ளன. மேலும் இவை விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதுடன், பணிக்குச் செல்வோரும், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். இவ்வாறு குட்டிகளுடன் உலா வரும் காட்டுயானைகள் பொதுமக்களைத் தாக்கி, அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வனத்துறையினர் யானைகளின் நடாட்டத்தைக் கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி ஆதிவாசி பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒற்றை யானை அட்டகாசம்
இதேபோல் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் காட்டு யானை ஒன்று அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறி குஞ்சப்பனை மாரியம்மன் கோவில் அருகே உள்ள சாலைக்கு வந்து குறுக்கே நின்றுக் கொண்டிருந்தது. சாலையில் யானையைக் கண்ட இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அச்சமடைந்து, சாலையின் ஓரமாக சென்று பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தினர். ஆனால் யானை நிற்பதை அறியாமல் வந்த பிற வாகனங்களைத் நோக்கி யானை சென்றது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள், கோவிலில் இருந்த மணியை பலமாக அடித்து ஒலி எழுப்பினர். இதனால் அச்சமடைந்த காட்டு யானை அங்கிருந்து வேகமாகச் சென்று, மீண்டும் வனப்பகுதிக்குள் புகுந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. யானை அங்கிருந்து சென்ற பின்னர் அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story