இப்படியும் ஒரு அதிரடி திருட்டு- ஏ.டி.எம். எந்திரத்தை ஜே.சி.பி.யால் பெயர்த்து தூக்கி சென்ற கொள்ளையன்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 April 2022 8:11 PM IST (Updated: 26 April 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஜே.சி.பி.யை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து சென்ற கொள்ளையனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை, 
மராட்டியத்தில் ஜே.சி.பி.யை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து சென்ற கொள்ளையனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 அதிரடி கைவரிசை 
கொள்ளையர்கள் பலவிதம். அவர்கள் தங்களது கைவரிசைக்காக பல நூதன வழிமுறைகளை கையாளுகிறார்கள். இந்தநிலையில் மராட்டிய மாநிலம் சாங்கிலியில் கொள்ளையன் ஒருவன் அதிரடியாக ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு வந்து ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து திருடி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகாவில் உள்ள அகர் கிராமத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம ஆசாமி ஒருவர் வந்தான். அவன் ஜே.சி.பி. எந்திரத்தை பயன்படுத்தி அங்கு வைக்கப்பட்டு இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை அலாக்காக பெயர்த்து எடுத்தான். பின்னர் ஜே.சி.பி. எந்திரத்தில் ஏ.டி.எம். எந்திரத்துடன் தப்பி சென்றான்.
கொள்ளையன் ஜே.சி.பி. மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரூ.4 லட்சம் சேதம்
இதற்கிடையே சம்பவம் குறித்து சாங்கிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அந்த அதிரடி ஆசாமி ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடிக்க ஜே.சி.பி. எந்திரத்தையும் திருடி வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. 
இது குறித்து மீரஜ் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் பெத்தாரே கூறுகையில், "ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்த பிறகு போலீசில் சிக்கிவிடுவோம் என்ற பயம் கொள்ளையனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவன் ஏ.டி.எம். எந்திரத்துடன் ஜே.சி.பி.யை அருகில் உள்ள பகுதியிலேயே நிறுத்திவிட்டு தப்பி சென்று உள்ளான். ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.27 லட்சம் இருந்தது. திருட்டு முயற்சியின் போது ஜே.சி.பி. எந்திரத்தால் ஏ.டி.எம். மையத்திலும், ஏ.டி.எம். எந்திரத்திலும் ரூ.4 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது. நாங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், ஜே.சி.பி. எந்திரம் திருடப்பட்ட இடத்தை வைத்து கொள்ளையனை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
மராட்டியத்தில் ஜே.சி.பி. எந்திரத்தை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-------------

Next Story