பொக்லைன் எந்திரங்கள் மூலம் 200 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
பண்ருட்டியில் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டிற்குட்பட்ட களத்துமேட்டில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து 200 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். மேலும் அவர்கள், இந்த பகுதியை சுற்றியுள்ள 13 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நேற்று வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் பாதுகாப்பும் போதிய அளவு இல்லாததால் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
200 வீடுகள் அகற்றம்
இந்த நிலையில் பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் இன்று காலை 8 மணிக்கு களத்துமேடு பகுதிக்கு வந்தனர். மேலும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் ஆகியோர் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து 7 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இந்த எந்திரங்கள் மூலம் 200 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. ஒவ்வொரு வீட்டையும் இடிக்கும்போது அந்த வீட்டில் வசித்தவர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. வீடுகளை இழந்த குடும்பத்தினர் சிலர் உறவினர் வீடுகளிலும், சிலர் அங்குள்ள மரத்தடியிலும், சிலர் அங்குள்ள அம்மன் கோவிலிலும் தங்கியுள்ளனர். இவர்களுக்கு இன்று(புதன்கிழமை) மாற்று இடம் வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story