குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 26 April 2022 9:59 PM IST (Updated: 26 April 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டுவில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

வத்தலக்குண்டு:

 வருமானத்துக்கு அதிகமாக சொத்து

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர், தேனியில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. அதன்பேரில் விவகோனந்தன் மீது, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், ரூபா கீதாராணி மற்றும் 5 போலீசார் நேற்று காலை 7 மணி அளவில் விவேகானந்தன் வீட்டுக்கு சென்றனர். அங்கு விவேகானந்தன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இருந்தனர்.

 லஞ்ச ஒழிப்பு சோதனை 

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், விவேகானந்தன் வீட்டில் சோதனையை தொடங்கினர். வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் அங்குலம், அங்குலமாக சோதனையிடப்பட்டது. மேலும் பீரோக்களை திறந்து போலீசார் சோதனையிட்டனர்.

குறிப்பாக கடந்த 5 ஆண்டு காலத்தில் விவேகானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் குறித்த விவரங்களை சேகரித்தனர். இதேபோல் வங்கி கணக்கு விவரங்கள், இருப்பு குறித்து விசாரித்தனர்.

சோதனையின்போது விவேகானந்தனின் வீட்டில் பணம் இருந்ததாக தெரிகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது, பணத்துக்கான ஆவணத்தை விவேகானந்தனின் குடும்பத்தினர் போலீசாரிடம் காட்டினர். இதனையடுத்து போலீசார் பணத்தை கைப்பற்றவில்லை. காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை, மாலை 6.40 மணி வரை நடந்தது. 

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையால் வத்தலக்குண்டுவில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லில் நீண்டகாலமாக பணிபுரிந்த விவேகானந்தன், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் பணிமாறுதலில் தேனிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story