கல்வராயன்மலையில் 1000 ஆண்டுகள் பழமையான சின்ன திருப்பதி கோவிலுக்கு பஸ் இயக்கப்படுமா
கல்வராயன்மலையில் 1000 ஆண்டுகள் பழமையான சின்ன திருப்பதி கோவிலுக்கு பஸ் இயக்கப்படுமா
கச்சிராயப்பாளையம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்பாச்சேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சின்னதிருப்பதி கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கோவிலை சுற்றி மூன்று திசைகளில் பாறைகளை குடைந்து கிணறு வெட்டப்பட்டுள்ளது. இந்த கிணறுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்றே தெரியவில்லை. ஆனால் இன்று வரை கடும் வறட்சியிலும் கூட கிணறு வற்றாமல் தண்ணீர் இருப்பதை காண்பது மிகவும் வியப்பாக உள்ளது.
இந்த கோவிலில் பெருமாள் சாமி வந்து சென்றதற்கு அறிகுறியாக பெருமாள்சாமியின் காலடி அதாவது பெருமாள் சாமி பாதம் உள்ளது. பெரிய கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் சுமார் 101 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூணும் உள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் சின்ன திருப்பதி கோவிலுக்கு வந்து மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள். ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளிப்பது பக்தர்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. எனவே பழமையான இந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
சின்ன திருப்பதி கோவிலுக்கு கள்ளக்குறிச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
முன்பு இந்த கோவிலுக்கு கரடுமுரடான ஏழு மலை பாதைகளை கடந்துதான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இதனால் முதியோர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு வெள்ளிமலையில் இருந்து சின்ன திருப்பதி கோவில் வரை 35 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கார், ஆட்டோ, வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து சாமி தரிசனம் செய்ய வசதியாக உள்ளது.
என்றாலும் சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு அரசு பஸ்கள்தான் வரப்பிரசாதம். ஆனால் பஸ் வசதி இல்லாததால் முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்து செல்கிறார்கள். அப்படி வருபவர்களில் சிலர் மலை ஏறும்போது மூச்சு திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு வருகிற புரட்டாசி மாதம் திருவிழா நடைபெற உள்ளதால் அதற்குள்ளாக பஸ் சேவையை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Related Tags :
Next Story