கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உணவு பொருட்களில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  உணவு பொருட்களில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை  கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 April 2022 4:42 PM GMT (Updated: 26 April 2022 4:42 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உணவுப்பொருட்கள் பழங்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

கள்ளக்குறிச்சி

வழிகாட்டுதல் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

உணவு கலப்படம்

உணவு கலப்படத்தை தடுப்பது தொடர்பாகவும், உணவு கலப்படம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் இதர துறையினரை கொண்டு மேற்கொள்ள வேண்டும். 
மேலும் மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து பழங்களை இயற்கையான முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்ய வியாபாரிகளை இக்குழு உறுப்பினர்கள் அறிவுறுத்த வேண்டும். 

உரிமம் பெற்று

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் பூச்சி மற்றும் எலிகளை கட்டுப்படுத்த தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தானிய சேமிப்பு கிடங்குகளில் வருடாந்திர பூச்சி கட்டுப்பாட்டு அமைப்புடன் ஒப்பந்தம் செய்து பூச்சி மற்றும் எலிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புதிதாக தொழில் தொடங்க உள்ள வணிகர்களை மாவட்ட தொழில் மைய மேலாளர் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று தொழில் தொடங்க அறிவுறுத்திட வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து, தரமான உணவை வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கிடவும், அங்கன்வாடி மையங்களில் உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் பதிவுச் சான்றிதழ் புதுப்பிக்கும் பணியை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டும். உணவு மாதிரியை ஆய்வுக்காக அனுப்ப வேண்டும். 

அபராதம் விதிக்க...

சுகாதார குறைபாடுகளுடன் இயங்கும் சிறிய உணவகங்கள், பேக்கரி, பெட்டிக்கடைகள் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்க உணவு நியமன அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை சங்க உறுப்பினர்கள், கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உணவகங்களில் கையுறை, தலையுறை பயன்படுத்திட வேண்டும். உணவகங்கள் மற்றும் கழிவறை உள்ளிட்டவைகளை சுகாதாரமாக பராமரித்திடவும் நுகர்வோருக்கு தெரியும்படி உணவுப் பொருட்களின் விலைப் பட்டியலை உணவகங்களில் வைத்திட வேண்டும். இறைச்சிகளை பயன்படுத்தும் உணவகங்கள் சுகாதாரமான இறைச்சிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு போதை தொடர்புடைய வலி மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என்று மருந்தக உரிமையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

உணவு மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த ஒரு உணவு பொருட்களையும் விற்கக்கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வின் போது உணவு பொருட்கள் மற்றும் பழங்களில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு வியாபாரிகள் சங்கமும், உணவக உரிமையாளர்கள் சங்கமும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுகந்தன், இணை இயக்குனர் (வேளாண்மை) வேல்விழி,  தொழில் மைய மேலாளர் முருகேசன், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அனைத்து வியாபாரிகள், நுகர்வோர் மற்றும் ஓட்டல் சங்க உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story