மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் சாவு
வலங்கைமான் அருகே மொபட்டும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வலங்கைமான்:-
வலங்கைமான் அருகே மொபட்டும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள இனாம்கிளியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 55). விவசாயி. இவருடைய மகள் சினேகா(19). இவர், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் கும்பகோணத்தில் இருந்து பஸ்சில் இனாம்கிளியூர் அருகே உள்ள கோவிந்தகுடி வரை வந்து அதன் பிறகு தந்தையுடன் மொபட்டில் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு கோவிந்தகுடியில் இருந்து சினேகாவை, ராஜேந்திரன் மொபட்டில் வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். கோவிந்தகுடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் திடீரென ராேஜந்திரன் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தந்தை-மகள் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
2 பேர் சாவு
அதேபோல மோட்டார் சைக்கிளில் வந்த கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் விக்னேஷ்(28), கீழ பழையாறு குடியானத்தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் மணிமாறன் (26) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து படுகாயத்துடன் இருந்த ராஜேந்திரன், சினேகா, விக்னேஷ் ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் ராஜேந்திரன், விக்னேஷ் ஆகிய இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
படுகாயம் அடைந்த விக்னேஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், சினேகா கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்தில் இறந்த இருவரின் உடல்களையும் வலங்கைமான் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா, சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலை விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story