கூடுதல் விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமம் ரத்து-வேளாண் இணை இயக்குனர்


கூடுதல் விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமம் ரத்து-வேளாண் இணை இயக்குனர்
x
தினத்தந்தி 27 April 2022 12:15 AM IST (Updated: 26 April 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குர் ரவீந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குர் ரவீந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பருத்தி சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் கோடைகாலத்தையொட்டி 16 ஆயிரத்து 328 எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ரவீந்திரன், திருவாரூர் அருகே உள்ள வடகரை பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களை ஆய்வு செய்தார். 
அப்போது பருத்தி சாகுபடி குறித்தும், தேவைகள் குறித்தும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்டுபாடுன்றி உரம் கிடைக்கிறதா?,  ஏதேனும் செயற்கையாக உரத்தட்டுப்பாடு நிலவுகிறதா? என இணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் தனியார் உர கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது விலை பட்டியல், இருப்பு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உரம் தட்டுப்பாடு குறித்தும், கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய மாவட்டம் முழுவதும் வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. 
இதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு கிடைத்த தகவலின் பேரில் குடவாசல் தாலுகாவில் புதுக்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தனியார் உரக்கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

உரிமம் ரத்து

உரத்துடன் இணை மருந்துகள் ஏதும் கட்டாயப்படுத்தி வழங்கினாலோ, கூடுதல் விலைக்கு உரம் விற்றாேலா சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் இந்த மாதத்துக்கு தேவையான யூரியா 3,900 டன் ஆகும். இதில் 2,138 டன் கையிருப்பில் உள்ளது. மீதம் தேவைப்படும் உரம் இந்த வாரத்திற்குள் வந்து விடும். இதேபோல் டி.ஏ.பி. 1425 டன் தேவைக்கு 711 டன் உரம் வந்துள்ளது. பொட்டாஷ் உரம் 950 டன் தேவைக்கு 777 டன் இருப்பில் உள்ளது.
கோடை சாகுபடி 15 ஆயிரம் எக்டேரில் நடைபெறும். இந்த ஆண்டு கோடை நெல் சாகுபடி குறைந்து பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது. குறிப்பாக பருத்தி 16 ஆயிரத்து 328 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 8 ஆயிரத்து 128 எக்டேர் சாகுபடி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஆண்டு கூடுதலாக பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா உடன் இருந்தார். 

Next Story