தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் பகுதி
சாலையில் தேங்கும் கழிவுநீர்
திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பல இடங்களில் குளம்போல் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்வதுடன், கால்வாயை முறையாக தூர்வார வேண்டும்.
-வினோத், தென்றல்நகர்.
சுகாதார சீர்கேடு
அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர் நாராயணபுரம் பகுதியில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு குடிநீர் பிடிப்பதற்கு குடங்களை வைக்கும் பகுதி பாசி படர்ந்து சுகாதாரசீர்கேடாக உள்ளது. குடிநீர் தொட்டிக்கு செல்லும் பாதை கரடு முரடாக இருக்கிறது. இதன் அருகிலேயே மின்சார வயர் செல்கிறது. இதுபோன்ற குறைகளை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-ராஜ்பாபு பானுநந்தினி, பொய்கை.
பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அர்ச்சுனரெட்டி தெருவில் வெறி நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதுடன், விரட்டி கடித்தும் வருகின்றன. இதனால் பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நடராசன், சோளிங்கர்.
குப்ைபகளை அகற்றுவார்களா?
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் நடமாடக்கூடிய இடத்தில் குப்பைகளை குவித்து ைவத்துள்ளனர். குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துமா?
-அம்மு, போளூர்.
பள்ளத்தை சீரமைக்க வேண்டும் (படம்)
குடியாத்தம், பிச்சனூர் பேட்டை, பலமநேர் சாலை ஓரம் உள்ள, வரதராஜ பெருமாள் கோவில் எதிரில், சரியாக மூடாத பள்ளத்தால் சாலையில் செல்வோருக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. சரியாக மூடப்படாத பள்ளத்தை உடனடியாக சீர் செய்து போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும்.
சரிதா, குடியாத்தம்.
நிழற்குடை அமைக்க வேண்டும்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ்நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தில் நிழற்குடை இல்லாததால் தற்போது கோடை வெயில் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் பகல்நேரங்களில் பஸ்நிலையத்தில் நிற்கமுடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பயணிகள் அமரும் பகுதியில் நிழற்குடை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.
வீணாகும் குடிநீர்
கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள குடிநீர் குழாய் ஒன்றில் மாணவர்கள் குடிக்கும் தண்ணீர் தொடர்ச்சியாக வீணாகி செல்கிறது. தண்ணீரின் தேவையை உணர்ந்து வீணாகும் குடிநீரை தடுக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.
போக்குவரத்துக்கு இடையூறாக பள்ளம்
வேலூர் சத்துவாசாரியில் வெள்ளாளர் தெரு உள்ளது. இங்குள்ள விநாயகர் கோவில் அருகே உள்ள சிமெண்டு சாலை ஓரத்தில் கால்வாய் மீது உள்ள பகுதி சரியாக மூடப்படாமல் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நீலமேகம், வேலூர்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
பேரணாம்பட்டு நகரம் புத்துக்கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை வளைவாக உள்ளது. இதனால் இந்தப்பகுதியில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. விபத்துகளை தடுக்க இங்கு மெதுவாக செல்லவும் என்ற அறிவிப்பு பலகை வைப்பதுடன், வேகத்தடை அமைக்க வேண்டும்.
-மணிகண்டன், பேரணாம்பட்டு.
தினத்தந்திக்கு நன்றி
குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை, ஆண்டியப்ப முதலி 2-வது தெருவில் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
-கணேசன், குடியாத்தம்.
Related Tags :
Next Story