போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு


போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 26 April 2022 11:19 PM IST (Updated: 26 April 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

சிவகங்கை, 
பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
கலந்துரையாடல்
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டுபடித்த இளைஞர்கள் வெற்றி பெற்று, அரசு அலுவலர்களாக வேண்டும் என்பதன் அடிப்படையில் கல்லூரி மற்றும் படித்த பல்வேறு இளைஞர்களுக்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 
பயிற்சி வகுப்பு
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவ, மாணவிகளின் தேவை மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்காக மாலைநேர பயிற்சி வகுப்புகள் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் கல்லூரியில் இருக்கும் நூலகங்களை தினந்தோறும் பயன்படுத்தும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் கல்லூரிக்கான காலம் இருப்பதால்  போட்டித் தேர்வுகளுக்கு தயாராக தொடங்க வேண்டும். படிக்கும் போது தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து, ஆராய்ந்து எந்தவித சந்தேகமும் இல்லாமல் புரிந்து படிக்க வேண்டும். இதன்மூலம் எந்தவிதமான, எந்தநிலையில் கேள்விகளை எதிர்கொண்டாலும் எளிதில் பதில் அளிக்க முடியும். 
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஹேமலதா, உதவி இயக்குனர்(மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்) முருகன், தொழில் மைய மேலாளர் கணேசன், மனிதவள மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியாளர் மணிகண்டன், உதவி பேராசிரியர் கேத்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story