10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றது தெரியாமல் மீண்டும் அதே வகுப்பில் படித்த மாணவன்


10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றது தெரியாமல் மீண்டும் அதே வகுப்பில் படித்த மாணவன்
x
தினத்தந்தி 26 April 2022 11:29 PM IST (Updated: 26 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் அரசினர்மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன் ஆசிரியர்களின் மெத்தன போக்கால் அதே வகுப்பில் மீண்டும் படித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தம்

குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் அரசினர்மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன் ஆசிரியர்களின் மெத்தன போக்கால் அதே வகுப்பில் மீண்டும் படித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10-ம் வகுப்பு மாணவன்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த வளத்தூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. வளத்தூரை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் பிள்ளைகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள். தற்போது இந்த பள்ளியில் 491 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். 17 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

100 சதவீதம் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் வளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அதே ஊரான வளத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி புஷ்பராஜ்- சங்கீதா தம்பதியின் மகன் கணேசன் (வயது 16) கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்துள்ளான்.

தேர்ச்சி பெற்றும் அதே வகுப்பில் படித்தான்

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதில் மாணவன் கணேசனும் தேர்ச்சி பெற்றிருந்தான். அதனை தொடர்ந்து தற்போதைய கல்வி ஆண்டில் அந்த மாணவன் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டும் 10-ம் வகுப்பிலேயே படித்து வந்துள்ளார்.

பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் கணேசன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை கவனிக்காமல் மெத்தனபோக்காக இருந்துள்ளனர். இதனால் கணேசனை பிளஸ்-1 வகுப்பில் சேர்க்காமல் மீண்டும் 10-ம் வகுப்பிலேயே கணேசன் இருந்தும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை

தற்போது மே மாதம் முதல் வாரத்தில் இந்த ஆண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இதற்காக மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் பள்ளிகளுக்கு வந்துள்ளது. ஹால் டிக்கெட்டை சரிபார்த்தபோது மாணவன் கணேசன் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணேசனுடன் படித்தவர்கள் பிளஸ்-1 படித்து வரும் நிலையில், இந்த மாணவனை எப்படி 10-ம் வகுப்பிலேயே தொடர்ந்து படிக்க ஆசிரியர்கள் அனுமதித்தார்கள் என தெரியவில்லை. 

இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதால் இன்று கல்வித்துறை உயரதிகாரிகள் பள்ளிக்கு வருகை தந்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களின் அலட்சியப் போக்கால் மாணவனின் ஒரு ஒரு வருட கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story