வேலூரில் மணல் கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
வேலூரில் மணல் கடத்தல் தொடர்பான ஆடியோக்கள் வெளியான விவகாரத்தில் தனிப்படை போலீஸ்காரர் பிரசாந்தை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்
வேலூரில் மணல் கடத்தல் தொடர்பான ஆடியோக்கள் வெளியான விவகாரத்தில் தனிப்படை போலீஸ்காரர் பிரசாந்தை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
மணல் கடத்தல்
வேலூர் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ஒருவர் அடுக்கம்பாறை பகுதியில் வீடு கட்டி வந்தார். அவர், வீட்டின் கட்டுமான பணிக்கு மணல் தேவைக்காக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படையில் பணியாற்றிய போலீஸ்காரர் பிரசாந்த் என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது பிரசாந்த், தனிப்படையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மூலம் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த பஞ்சர் மணி என்பவரை தொடர்பு கொண்டு ஆயுதப்படை போலீஸ்காரர் வீட்டுக்கு மணல் கடத்தி செல்லும்படி கூறி உள்ளார்.
மேலும் மணல் கடத்தி செல்லும் வண்டி யாரிடமும் சிக்காமல் பார்த்து கொள்வதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். அதன்பேரில் பஞ்சர் மணி மற்றும் சிலர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மினிவேனில் மணல் கடத்தி செல்ல முயன்றனர். அப்போது பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தொரப்பாடி பகுதியில் அந்த மினிவேனை மடக்கி பிடித்தனர். அப்போது, மணல் கடத்தி வந்தவர்கள் தப்பியோடினார்கள். மினிவேன் பாகாயம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பணியிடை நீக்கம்
பாகாயம் போலீஸ் நிலையத்தில் சிக்கியுள்ள மினிவேனை மீட்டு தரக்கோரி பஞ்சர் மணி, தனிப்படை போலீஸ்காரர் பிரசாந்திடம் பேசும் 4 ஆடியோ உரையாடல் கடந்த மாதம் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை போலீஸ்காரர் பிரசாந்த் உள்பட பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக தனிப்படையில் இருந்து பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் வெளியான உரையாடல் ஆடியோக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பிரசாந்தை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story