அடிக்கடி பழுதானதால் புதிய மின்சார ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்த உரிமையாளர்
பேரணாம்பட்டு அருகே ரூ.1½ லட்சம் கொடுத்து வாங்கிய புதிய மின்சார ஸ்கூட்டர் அடிக்கடி பழுதானதால் ஆத்திரமடைந்த அதன் உரிமையாளர் அதனை பெட்ரோல் ஊற்றி எரித்தார்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே ரூ.1½ லட்சம் கொடுத்து வாங்கிய புதிய மின்சார ஸ்கூட்டர் அடிக்கடி பழுதானதால் ஆத்திரமடைந்த அதன் உரிமையாளர் அதனை பெட்ரோல் ஊற்றி எரித்தார்.
மின்சார ஸ்கூட்டர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (வயது 40). பிசியோதெரபிஸ்ட். இவர் ஓலா நிறுவனத்தில் புதிய மின்சார ஸ்கூட்டர் ஒன்றை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து சமீபத்தில் வாங்கியுள்ளார். புதிதாக வாங்கிய ஸ்கூட்டர் அடிக்கடி பழுது ஏற்பட்டு செல்லும் வழியில் பாதியிலேயே நின்றுள்ளது. அதனால் பிரித்திவிராஜ் மிகவும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
மேலும் அவசர வேலையாக நீண்ட தூரம் செல்லும் வழியில் பாதியிலேயே ஸ்கூட்டர் நின்று, வழியில் செல்வோரிடம் உதவி கேட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.
தீ வைத்து எரிப்பு
இந்நிலையில் வாகன பதிவு எண் செய்வதற்காக ஆம்பூரிலிருந்து குடியாத்தம் நோக்கி பிரித்திவிராஜ் சென்றுள்ளார். பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி குருநாதபுரம் கிராமம் அருகில் சென்று கொண்டிருந்த போது மீண்டும் பழையபடி பழுது ஏற்பட்டு ஸ்கூட்டர் நின்றுவிட்டது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து நீண்ட நேரம் ஆகியும் நிறுவன பணியாட்கள் பழுதை நீக்க முன்வரவில்லை. அவர் பாதி வழியிலேயே சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு மணிக் கணக்கில் காத்திருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் பணியாளர்கள் எவரும் வராததால் வெறுப்புக்குள்ளானார். ஆத்திரமடைந்த அவர், பெட்ரோல் வாங்கி வந்து பழுதாகி நின்ற தன்னுடைய புதிய ஸ்கூட்டர் மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
அதை வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்தார். அது வைரலானது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக மேல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story