பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தல் ஒடிசாவை சேர்ந்த வாலிபர் கைது


பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தல் ஒடிசாவை சேர்ந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 April 2022 12:20 AM IST (Updated: 27 April 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலுக்கு வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலுக்கு வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்தல்
பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் வரும் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு சுகிர்லால் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார் ராஜ், பழனியப்பன், சோம சேகரன் ஆகியோர் நேற்று காலை நாகர்கோவில் வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்த போலீசார், அவர் வைத்திருந்த பெரிய பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சாவை வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
கைது
அதைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஒடிசாவை சேர்ந்த நிரஞ்சன் மாஜீ (வயது 24) என்பதும் அவர் கஞ்சா பொட்டலங்களை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலும் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் ரெயில் மூலமாகவே நடந்துள்ளது.
தற்போது குமரி மாவட்டத்தில் சப்ளை செய்வதற்காக கஞ்சாவை கடத்தி வந்தபோது போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கிக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் கஞ்சாவைகுமரி மாவட்டத்தில் யாருக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
பரபரப்பு
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் 24 கிலோ கஞ்சாவை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். போதைமாத்திரைகளும் சிக்கி வரும் நிலையில் தற்போது 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---

Next Story