மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பலி
ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்விளக்கு அலங்காரம் செய்ய...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஆசிரியர்நகர் கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சஞ்சய் (வயது22). சின்னமூக்கனூர் அருகே உள்ள மரட்டியான் வட்டம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் பிரகாஷ் (30). இவர் சவுண்ட் சர்வீஸ் வைத்துள்ளார். இவரிடம் சஞ்சய் வேலை செய்து வந்தார்.
இவர்கள் ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக, மைக் செட் கட்டவும், பந்தல் மற்றும் மின்விளக்கு அலங்காரம் செய்யவும் நேற்று காலை சுமார் 11 மணியளவில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
லாரி மோதி பலி
சாலை நகர் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மோட்டார்சைக்கிள் மீது மோதிய லாரி டிரைவர் நிற்காமல் வேகமாக லாரியை ஓட்டிச்சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் லாரியை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். சிலர் லாரியின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தினர். அதன் பிறகு லாரி டிரைவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
டிரைவருக்கு சிகிச்சை
அவரிடம் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பதும், தர்மபுரியில் இருந்து வேலூருக்கு சென்றதும் தெரியவந்தது.
பொதுமக்கள் தாக்கியதில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story