233 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


233 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 27 April 2022 1:49 AM IST (Updated: 27 April 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் 233 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை தனுஷ்குமார் எம்.பி. வழங்கி பேசினார்.

மகளிர் திட்டத்தின் சார்பில் வட்டார வளமையம் மூலம் தொழில் முனைவோருக்கு ரூ.34.75 லட்சம் மதிப்பில் 60 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் இணையவழி மூலம் 40 பேருக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 47 பேருக்கும் இலவச பட்டா வழங்கப்பட்டது. மேலும் ரூ.21 ஆயிரம் மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்கள் 4 பேருக்கும், வருவாய்த்துறை மூலம் இணையவழி இலவச பட்டா 20 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 33 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆகிய உதவித்தொகைக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன. வேளாண்மைத்துறை மூலம் கூட்டு பண்ணையம் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.5 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர் என மொத்தம் 233 பயனாளிகளுக்கு ரூ.86.52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் ஷீலா, வேளாண்மை துறை இணை இயக்குனர் தமிழ் மலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story