30 ஆண்டுகளுக்கு மேல் மின்வசதியின்றி இருளில் தவிக்கும் மீனவ குடும்பங்கள்
சேதுபாவாசத்திரம் அருகே 30 ஆண்டுகளுக்கு மேல் மின்வசதியின்றி மீனவ குடும்பங்கள் இருளில் தவிக்கின்றன. எனவே மின்வசதி செய்து தரக்கோரி வருகிற 10-ந் தேதி சாலை மறியலில் ஈடுபட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முடிவு செய்து உள்ளனர்.
சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம் அருகே 30 ஆண்டுகளுக்கு மேல் மின்வசதியின்றி மீனவ குடும்பங்கள் இருளில் தவிக்கின்றன. எனவே மின்வசதி செய்து தரக்கோரி வருகிற 10-ந் தேதி சாலை மறியலில் ஈடுபட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முடிவு செய்து உள்ளனர்.
மின்வசதி
சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடா மீனவ கிராமத்தில்,
ஐஸ்வாடி பகுதியில், 15-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக, மின்வசதி இன்றி இருளில் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு, மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 10-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷப்பூச்சிகள்
இரவில் மின் வசதி இல்லாததால் பாம்புகள், விஷப்பூச்சிகள் நடமாட்டத்தில், குழந்தைகளை வைத்துக்கொண்டு இப்பகுதி மக்கள் இரவில் தவித்து வருகின்றனர். தற்போது மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்தநிலையில் பனியிலும், மழையிலும் பெண் குழந்தைகள் தெருவில் உள்ள மின்விளக்கு ஒளியில் அமர்ந்து படிக்கின்றனர். குடும்ப அட்டை, வீட்டு வரி ரசீது இருந்தும் இவர்களுக்கும் அரசு மின் வசதி அளிக்க மறுக்கிறது.
சாலை மறியல்
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், மூத்த உறுப்பினர் வீ.கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள், மற்றும் நிர்வாகிகள் அப்பகுதிக்கு நேரில் சென்று, மீனவ குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது தேர்தல் நேரத்தில் மட்டும், வாக்குகளை பெறுவதற்காக மின் வசதி ஏற்படுத்தி தரப்படும் என கூறும் அரசியல் கட்சிகள் பொறுப்புக்கு வந்தவுடன் இப்பகுதி மக்களின் அடிப்படை உரிமையான மின் வசதியை ஏற்படுத்தி தர மறுக்கின்றனர்.
எனவே இப்பகுதி மக்களுக்கு மின் வசதி செய்து தர வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கிழக்கு கடற்கரை சாலையில் கழுமங்குடா பகுதியில் சாலை மறியல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story