ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.964¾ கோடி மதிப்பீட்டில் 54 திட்ட பணிகள்


ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூ.964¾ கோடி மதிப்பீட்டில் 54 திட்ட பணிகள்
x
தினத்தந்தி 27 April 2022 2:02 AM IST (Updated: 27 April 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.964¾ கோடி மதிப்பீட்டில் 54 திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.964¾ கோடி மதிப்பீட்டில் 54 திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு குழு கூட்டம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு குழு தலைவர் கணேசமூர்த்தி எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, இணைத்தலைவர் சுப்பராயன் எம்.பி., ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில் குழு தலைவர் கணேசமூர்த்தி எம்.பி. பேசும்போது, ‘மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறைவாரியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றார்.
339 குடியிருப்புகள்
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தனிநபர் இல்லக்கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆய்வு அட்டைகள் மற்றும் ஆய்வுப்பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆய்வு அலுவலர்கள் கழிப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு குறிப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பிரதமமந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 339 குடியிருப்புகள் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்க, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து குக்கிராமங்களையும் ஊரக மற்றும் விவசாய சந்தைகள், மண்டி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகளுடன் தரமான சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.964 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் 54 திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டு மேற்படி 17 பணிகள் ரூ.271 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 37 பணிகள் ரூ.693 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளிலும் பையோமைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்துணவு திட்டம்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,184 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகள் சுயமாக வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 362 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்இளம் பெண்கள் ஆகியோருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண் கல்வி கராத்தே பயிற்சி
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 62 ஆயிரத்து 989 ரேஷன் கார்டு தாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் பொதுவினியோக திட்டத்தின் கீழ் உணவுபொருட்கள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய நில ஆவணங்கள் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் அனைத்து நகர நிலப்பதிவேடுகள் மற்றும் கிராம புலப்படங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழி படுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு பயிற்சிகள், கஸ்தூரிபா காந்தி பெண்கள் உண்டு உறைவிடப்பள்ளிகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கல்வி திட்டம், போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் வசதி, பெண் கல்வி கராத்தே பயிற்சி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,924 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணிகந்தசாமி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மகளிர் திட்ட இயக்குனர் கெட்ஸி லீமா அமலினி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story