வாலிபருக்கு தூக்கு தண்டனை


வாலிபருக்கு தூக்கு தண்டனை
x
தினத்தந்தி 27 April 2022 2:19 AM IST (Updated: 27 April 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

மாணவி தலையை துண்டித்து கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம்:-
மாணவி தலையை துண்டித்து கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
பள்ளி மாணவி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே  தளவாய்பட்டியை அடுத்த சுந்தராபுரம் தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவருடைய மனைவி ஜோதி. இவர்களது மகன் தினேஷ்குமார் (வயது 28). இவர் நெல் அறுவடை செய்யும் எந்திர ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி சின்னப்பொன்னு. 2 பேரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களது மகள் ராஜலட்சுமி (13). இவர் தளவாய்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இரு குடும்பத்தினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் அங்கு வசிக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் அன்பாக பழகி வந்து உள்ளனர்.
நூல்கண்டு
இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள தினேஷ்குமாருக்கு சொந்தமான தோட்டத்தில், மாணவி ராஜலட்சுமி பூப்பறிப்பதும். அதே போன்று மாணவியின் வீட்டு தோட்டத்தில் உள்ள பூக்களை தினேஷ்குமாரின் குடும்பத்தினர் பறிப்பதும் வழக்கமாக கொண்டு உள்ளனர். அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி மாலை 6 மணி அளவில் ராஜலட்சுமி, தினேஷ்குமாரின் தோட்டத்தில் பூக்கள் பறித்துக்கொண்டு தனது வீட்டுக்கு வந்து தாயிடம் கொடுத்து உள்ளார்.
பின்னர் பூக்களை கட்டுவதற்காக வீட்டில் நூல்கண்டை தேடி உள்ளார். ஆனால் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் தாயிடம் கூறினார். அதற்கு அவர் தினேஷ்குமார் வீட்டிற்கு சென்று நூல்கண்டு வாங்கி வரும்படி கூறினார். இதையடுத்து ராஜலட்சுமி, தினேஷ்குமாாின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த தினேஷ்குமாரிடம் அவர் நூல்கண்டு கொடுக்கும்படி கேட்டார்.
தலையை துண்டித்து கொலை
அப்போது தினேஷ்குமார் தவறான அர்த்தத்தில் பேசி, ராஜலட்சுமியின் கையை பிடித்து இழுத்து உள்ளார். இதையடுத்து அவரது பிடியில் இருந்து தப்பிய மாணவி, தனது பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் ராஜலட்சுமியிடம் பேசியது குறித்து எங்கே அவரது பெற்றோரிடம் கூறி விடுவாரோ? என்று எண்ணிய தினேஷ்குமார், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு கோபமாக மாணவியின் வீட்டுக்குள் திடீரென்று புகுந்தார். தினேஷ்குமார், அரிவாளுடன் நிற்பதை பார்த்த சின்னப்பொன்னு, ராஜலட்சுமி ஆகிய இருவரும் திடுக்கிட்டனர்.
பின்னர் சின்னப்பொன்னு அவரிடம் ஏன்?, என்ன நடந்தது? என்று கேட்டு உள்ளார். அப்போது தினேஷ்குமார் அவரது சாதி பெயரை சொல்லி திட்டி அவரை கீழே தள்ளி விட்டு, கண் இமைக்கும் நேரத்தில் மாணவி ராஜலட்சுமியின் கழுத்தில் அரிவாளால் வெட்டியதுடன், தலையை தனியாக துண்டித்து கொலை செய்தார். தன் கண்முன்னே மகள் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்ட சின்னப்பொன்னு அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
தூக்கு தண்டனை
பின்னர் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்து மாணவியின் வீட்டில் ஒரு இடத்தில் வைத்து விட்டு அங்கிருந்து தினேஷ்குமார் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ராஜலட்சுமியின் தந்தை சாமிவேல் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொலை, வன்கொடுமை தடுப்பு பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மாணவி ராஜலட்சுமி கொலை வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி ராஜலட்சுமியை கொலை செய்த குற்றத்திற்காக, தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி முருகானந்தம் பரபரப்பு தீர்ப்பு அளித்தார். 
அபராதம்
அத்துடன், சாதி பெயரை சொல்லி திட்டியதற்கு ஆயுள் தண்டனையும், மற்ற 3 பிரிவுகளுக்கு 10 மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். மேலும் 5 பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அபராத தொகையை இறந்த ராஜலட்சுமியின் தாயிடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் ஆசைத்தம்பி ஆஜராகி வாதாடினார்.
மாணவியின் தலையை துண்டித்து கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் நேற்று சேலம் கோர்ட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story