கலப்பட டீசல் விற்ற 2 பேர் கைது
ேசலத்தில் கலப்பட டீசல் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். டேங்கர் லாரி தீப்பிடித்ததால் அவர்கள் போலீசில் சிக்கினர்.
அன்னதானப்பட்டி:-
ேசலத்தில் கலப்பட டீசல் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். டேங்கர் லாரி தீப்பிடித்ததால் அவர்கள் போலீசில் சிக்கினர்.
டேங்கர் லாரியில் தீ
சேலம் கந்தம்பட்டி பைபாஸ் அருகே மூலப்பிள்ளையார் கோவில், பரமசிவம் காடு பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான குடோன், காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 3 மாதங்களாக வாடகைக்கு எடுத்து லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லோடுடன் ஒரு டேங்கர் லாரி அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது லாரியின் மேல் பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காயம்
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் லாரியில் பிடித்து எரிந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இதனால் லாரி முழுவதும் தீப்பிடித்து எரியாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் இந்த விபத்தில் அருகில் இருந்த மற்றொரு லாரியின் டிரைவர் செல்வராஜ் என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 பேர் கைது
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னதானப்பட்டி போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது அதில் 10 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்தது. அதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சேலம் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது லாரியில் இருந்தது கலப்பட டீசல் என்பதும், வெங்கடேசன் மும்பை மார்க்கெட்டிலிருந்து கலப்பட டீசல் வாங்கி வந்து சேலத்தில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கலப்பட டீசல் விற்றதாக லாரி உரிமையாளர் வெங்கடேசன் (வயது 45), டிரைவர் சக்திவேல் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததால், அவர்கள் 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story