மூதாட்டியை கொன்று தங்கநகைகள் கொள்ளை
மலவள்ளி அருகே மூதாட்டியை கொன்று தங்கநகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஹலகூர்:
மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கிருகாவலு கிராமத்தை சேர்ந்தவர் சாந்தம்மா(வயது 85). நேற்று முன்தினம் இரவு சாந்தம்மா சாப்பிட்டு விட்டு வீட்டு முன்பு உள்ள திண்ணையில் தனியாக அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கீழே இறங்கி திண்ணையில் அமர்ந்திருந்த சாந்தம்மாவின் வாயை ஒருவர் மூடிக்கொள்ள மற்றோருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கநகைகளை பறிக்க முன்றார். அவர்களிடமிருந்து நகைகளை காப்பாற்ற சாந்தம்மா முயற்சித்தார்.
ஆனாலும் மர்மநபர்கள் சாந்தம்மாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு தங்கநகைகளை பறித்து மோட்டார் சைக்கிளில் பறந்து தப்பி சென்றுவிட்டனர். இதற்கிடையே சிறிது நேரம் கழித்து மருமகள் சுகன்யா வௌியில் வந்து பார்த்துள்ளார். அப்போது சாந்தம்மா மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அப்பகுதியினர் உதவியுடன் சாந்தம்மாவை மீட்டு உடனடியாக மைசூருவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சாந்தம்மா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருகாவல் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதில் தங்கநகைகளை பறித்து மூதாட்டியை கொன்றுவிட்டு மர்மநபர்கள் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கிருகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story