ஜீயபுரம் அருகே விவசாயி கொலை வழக்கில் 6 பேர் போலீசில் சரண்


ஜீயபுரம் அருகே விவசாயி கொலை வழக்கில் 6 பேர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 27 April 2022 2:38 AM IST (Updated: 27 April 2022 2:38 AM IST)
t-max-icont-min-icon

ஜீயபுரம் அருகே விவசாயி கொலை வழக்கில் 6 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

ஜீயபுரம், ஏப்.27-
ஜீயபுரம் அருகே விவசாயி கொலை வழக்கில் 6 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
வெட்டிக்கொலை
திருச்சி மாவட்டம் கொடியாலம் பகுதியிலுள்ள சுப்பராயன் பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 47), விவசாயி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழுமணியில் உள்ள மெக்கானிக் கடையில் தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்க்க சென்றபோது  7 பேர் கொண்ட மர்ம ஆசாமிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் இந்த கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த வீரபாகு, பிரசாந்த், சிவனேசன் என்கின்ற சிவா, சம்பத்குமார், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரி, சுப்பராயன்பட்டியை சேர்ந்த பூபதி, கோப்பு கிராமத்தைச் சேர்ந்த அசோக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
6 பேர் சரண்
இந்த நிலையில் நேற்று காலை தலைமறைவாக இருந்த கொலையாளிகள் 6 பேர் ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் பாலாஜி முன்னிலையில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள பூபதியை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர் அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட ரவிச்சந்திரன் மகன் அரவிந்தனிடம், வீரபாகு பிரசாந்த், விக்கி, சிவா ஆகியோர் மீன் பிடித்த காசு கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் அரவிந்தனை தாக்கினோம்.
இதனால் ரவிச்சந்திரன் முசிறி மற்றும் புலிவலம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சாபமிட்டார்.  இந்த நிலையில் சில நாளில் விக்கி என்பவர் சாலை  விபத்தில் இறந்து விட்டார். என்னுடைய சாபத்தினால் தான் விக்கி இறந்ததாக அப்பகுதி மக்களிடம் ரவிச்சந்திரன் கூறி வந்தார். இது எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம்.
கைது
சம்பவத்தன்று பேரூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்குவதற்காக பிரசாந்த், சிவகுமார் ஆகியோர் சென்று விட்டு திரும்பும் வழியில் மெக்கானிக் கடையில் ரவிச்சந்தின் மட்டும் தனியாக இருப்பதை கண்டோம். பின்னர் மது அருந்திவிட்டு  ரவிச்சந்திரனை கொலை செய்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story