பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
மயிலாடுதுறை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட கார், வேன், ஆட்டோ, சரக்கு ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் அன்பு தலைமை தாங்கினார். நகர தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் தமிழர் தேசிய முன்னணியின் மாவட்ட செயலாளர் பேராசிரியர் முரளிதரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பது, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். 15 ஆண்டுகள் முடிந்த வாடகை வாகனங்களுக்கு எப்.சி. கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். வாகன சுங்க கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கட்டாய வசூல் செய்யப்படுவதை தடுக்க வேண்டும். புதுச்சேரி மாநில நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர பூங்காவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கச்சேரி ரோடு, கண்ணாரத்தெரு வழியாக தாசில்தார் அலுவலகம் வந்தடைந்தனர்.
Related Tags :
Next Story