2-ம் கட்ட பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக சென்னையில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2-ம் கட்ட பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக வருகிற மே மாதத்துக்குள் 25 ஆயிரம் மரக்கன்றுகள் சென்னையில் நட திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் தொிவித்து உள்ளனர்.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் கட்டமாக 54.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்களை அமைத்து ரெயில் போக்குவரத்தை நடத்தி வருகிறது. இந்தப்பணிகளுக்காக 2 ஆயிரத்து 644 மரங்கள் வெட்டப்பட்டன. பாதைகள் மற்றும் நடைமேடை அமைப்பதற்கு இடையூறாக உள்ள மரங்கள் மட்டுமே வெட்டப்படுகிறது. இதற்கு பதிலாக 72 ஆயிரத்து 674 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தற்போது 2-வது கட்டப்பணியின் போது ஒருமரம் வெட்டப்பட்டால் அதற்கு பதிலாக 12 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதுவரை, 19 இடங்களில் 2 ஆயிரத்து 339 மரங்கள் வெட்டப்பட்டு, 6 இடங்களில் 2 ஆயிரத்து 695 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வருகிற மே மாதத்துக்குள் 25 ஆயிரத்து 729 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் 2-வது கட்டமாக 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது இடையூறாக 5 ஆயிரத்து 436 மரங்கள் இடையூறாக இருப்பது கணக்கிடப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 589 மரங்கள் தக்கவைக்கப்பட்டு உள்ளன. அயனாவரம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, திருவான்மியூர், சாலிகிராமம், வடபழனி, பவர்ஹவுஸ், பூந்தமல்லி பஸ் நிலைய முனையம், மாதவரம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்து 339 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
இதுதவிர 19 இடங்களில் இருந்து 49 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. 59 மரங்கள் நடப்பட்டு உள்ளன. தொடர்ந்து 400 மரங்கள் நடவு செய்யப்பட உள்ளது.
துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி, அம்பேத்கர் கலைக் கல்லூரி, வானகரம், வயலாநல்லூர் உள்ளிட்ட ஒரு சில பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இதுதவிர காரம்பாக்கம் அரசுப்பள்ளி, பச்சையப்பா கல்லூரி உள்ளிட்ட 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story