கூடலூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க நடவடிக்கை
கூடலூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
ஊட்டி
கூடலூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
56 மனுக்களுக்கு தீர்வு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் விவசாய சங்கங்களை சார்ந்த விவசாயிகள் மற்றும் இதர துறையினை சார்ந்த அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:- விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 56 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும், தேனீ வளர்ப்பு பயிற்சி கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் வழங்கப்பட உள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தரிசு நிலங்களில் விவசாயம் செய்பவர்களுக்கு காய்கறி தோட்டம் அமைக்க விதைதொகுப்பு, பழச்செடிகள் தொகுப்பு வழங்கப்படும்.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
நீலகிரி மாவட்டத்தில் உரங்களின் தட்டுப்பாடு போக்க அதிக அளவு உரங்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் வணிகத் துறையின் மூலம் கூடலூர் உழவர் சந்தையினை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கூடலூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பிரதம மந்திரி விவசாய நிதி திட்டத்தில் உழவர் கடன் அட்டை பெறாதவர்கள் அனைவரும் உழவர் கடன் அட்டை பெறவும், தங்களது கைரேகையை பதிவு செய்யும் பட்சத்தில் மட்டுமே இனி தவணைத்தொகை வழங்கப்படும். அதனால் விவசாயிகள் அனைவரும் பொது சேவை மையத்தை அணுகி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story