ஜம்ஜம் தண்ணீர் கொண்டுவர விமான நிறுவனங்கள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஜம்ஜம் தண்ணீர் கொண்டுவர விமான நிறுவனங்கள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
ஜம்ஜம் தண்ணீர் கொண்டுவர விமான நிறுவனங்கள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
புனித பயணம்
உலகம் முழுவதிலும் இருந்து சவுதி அரேபியாவின் புனித மக்கா நகருக்கு முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்ரா புனிதப்பயணம் செய்கின்றனர். இதற்கிடையே, கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு பின்னர், சவுதிஅரேபிய அரசாங்கம் கடந்த மாதம் முதல் புனித மக்கா நகருக்கு செல்ல வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதிஅளித்துள்ளது.
அதனை தொடர்ந்து, ரமலான் நோன்பை முன்னிட்டு உலகம் முழுவதிலும் இருந்து நிறைய பேர் அங்கு உம்ரா பயணம் சென்று உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் தமிழகத்தில் இருந்து அதிய பயணிகள் உம்ரா புனித பயணம் மேற்கொண்டு உள்ளனர். இதற்கிடையே அங்கிருந்து வருபவர்களுக்கு ஜம்ஜம் எனப்படும் அதிசய நீரூற்றின் தண்ணீர் சவுதி அரசால் இலவசமாக வழங்கப்படுவது வழக்கம்.
அனுமதி மறுப்பு
அதன்படி, ஒவ்வொருவருக்கும் 5 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். அதனை விமானங்களில் கொண்டுவர கட்டணம் கிடையாது. இந்த நிலையில் ஓமன் ஏர்வேஸ் தவிர அனைத்து விமான நிறுவனங்களும் இந்த தண்ணீரை கொண்டு வர அனுமதி மறுத்து வருகின்றன.
இதற்கு சவுதியில் உள்ள ஜித்தா விமான நிலையத்தில் ஸ்கேனர் வசதி இல்லாததால் விமான நிறுவனங்கள் ஜம்ஜம் தண்ணீரை அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அரசு விமான நிலைய வாயிலில் வழங்கும் ஜம்ஜம் தண்ணீரை ஸ்கேன் செய்யாமல் விமானங்களில் அனுமதித்து உள்ளதாக கூறப்படுகிறது.
விமான நிறுவனங்கள் தான் தண்ணீர் கொண்டு வர அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் இரு நாட்டு அரசுகளும் தலையிட்டு விமான நிறுவனங்கள் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று இந்திய ஹாஜிகள் மற்றும் பயணிகள் தரப்பில் வலியுறுத்தப் பட்டு உள்ளது.
கோரிக்கை
அதேபோல, தமிழகத்தை சேர்ந்த பயணிகள், இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சவுதி அரேபியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தி தமிழக பயணிகள் ஜம்ஜம் தண்ணீர் கொண்டு வர விமான நிறுவனங்கள் அனுமதிஅளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story