பிற கட்சிகளின் தலைவர்கள் பா.ஜனதாவுக்கு வர ஆர்வமாக உள்ளனர்; மந்திரி ஆர்.அசோக் பேட்டி
சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும், பா.ஜனதாவில் இணைய பிற கட்சிகளின் தலைவர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.
பெங்களூரு:
தலைவர்கள் ஆர்வம்
கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும். சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவில் இணைய பிற கட்சிகளின் தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஒன்று அல்லது இரண்டு தலைவர்கள் எங்கள் கட்சியில் சேர விரும்பவில்லை. ஏராளமான தலைவர்கள் எங்களிடம் வர ஆர்வமாக இருக்கிறார்கள். சமீபத்தில் 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா 4 மாநிலங்களில் வெற்றி பெற்றதாலும், ஹிஜாப் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு காரணமாகவும் அந்த கட்சி தலைவர்கள் எங்கள் கட்சியில் சேர விரும்புகிறார்கள்.
கர்நாடக சட்டசபை கூட்டத்தில் ஹிஜாப் விவகாரம் குறித்து காங்கிரஸ் பேசவில்லை. ஆனால் வெளியில் தான் ஹிஜாப் விவகாரம் குறித்து பேசுகின்றனர். சட்டசபை கூட்டத்தில் ஹிஜாப் குறித்து பேச சித்தராமையா விரும்பிய போதும், டி.கே. சிவக்குமார் சட்டசபையில் ஹிஜாப் விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி யாரை சமாதானப்படுத்த விரும்புகிறது என்பதை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
150 தொகுதிகளில்...
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் வெற்றி பெற எங்கள் கட்சியின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேரணி நடத்த முடிவு செய்து உள்ளனர். அமித்ஷா இந்த மாத தொடக்கத்தில் கர்நாடகம் வந்து சென்றார்.
அப்போது அடுத்த சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மற்ற கட்சிகளின் தலைவர்களை பா.ஜனதாவில் இணைப்பது குறித்து மாநில தலைவர் தலைமையிலான குழு முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story