நெல் கொள்முதல் நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு : திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
நெல் கொள்முதல் நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு களாம் பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த நெல் மூட்டைகளை கொடுத்து பயன்பெற்று வந்தனர்.
600 ஏக்கரில் பயிர் செய்த நெல் மூட்டைகளை இங்கு விவசாயிகள் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு களாம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அதிகாரிகள் விவசாயிகளிடம் முறையான தகவல் எதுவும் தெரிவிக்காமல் சின்னமண்டலி கிராமத்திற்கு மாற்றுவதாக தெரிவித்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட களாம்பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு களாம்பாக்கம் கிராமத்தில் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதை கண்டித்தும் மீண்டும் களாம்பாக்கம் கிராமத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story