70 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுகிறது: கத்திரி மலையில் சாலைஅமைக்கும் பணி


70 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுகிறது: கத்திரி மலையில் சாலைஅமைக்கும் பணி
x
தினத்தந்தி 27 April 2022 8:48 PM IST (Updated: 27 April 2022 8:48 PM IST)
t-max-icont-min-icon

கத்திரிமலையில் உள்ள மக்களின் 70 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.

கத்திரிமலையில் உள்ள மக்களின் 70 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.
கத்திரிமலைக்கிராமம்
ஈரோடு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக அமைந்து உள்ளது கத்திரிமலை. அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சிக்கு உள்பட்ட இந்த கத்திரிமலை சமவெளியில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு மலைக்கிராமமாக இருந்தது. இங்கு 76 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குழந்தைகளுக்காக அங்கேயே பள்ளிக்கூட வசதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த கத்திரிமலை கிராமத்துக்கு வாகனங்கள் செல்லும் வசதியான சாலைகள் கிடையாது. கரடுமுரடான ஒற்றையடி பாதையில் மிகவும் சிரமப்பட்டு மக்கள் கடந்து சென்று வந்தனர். ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளும் இதே போன்று செல்ல வேண்டியது இருந்ததால், பலரும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே கத்திரிமலை இருந்தது.
முதல்-அமைச்சரிடம்...
சில ஆண்டுகளுக்கு முன்பு கத்திரிமலையில் உள்ள பொதுமக்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தும் வகையில் சூரிய சக்தி மின்வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்தநிலையில் மலைவாழ் மக்கள் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பொருளாதார மேம்பாட்டில் அதிக அக்கறை எடுத்து செயல்பட்டு வரும் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, கத்திரிமலை பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் சில நடவடிக்கைகள் எடுத்தார்.
அதன்பேரில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கத்திரிமலை பகுதி மக்கள் கடந்த 10-1-2022 அன்று காணொலி காட்சி மூலம் பேசினார்கள். அப்போது கத்திரிமலை பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு சரியான சாலை வசதி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் கத்திரிமலையில் உள்ள கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு பகுதிவரை சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. இதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ரூ.8 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
70 ஆண்டு கால கோரிக்கை
இந்த கோரிக்கை கத்திரிமலை கிராம மக்களின் 70 ஆண்டுகால கோரிக்கையாகும். தற்போது இந்த பணி தொடங்கப்பட்டு வாகனங்கள் செல்லும் அளவுக்கு மண்சாலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் கப்பி சாலையாக இது போடப்பட இருக்கிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நேற்று கத்திரிமலை கிராமத்தில் நடைபெறும் திட்டப்பணிகள் தொடர்பான சோதனையை நடத்தினார். அவருடன் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, அந்தியூர் தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கர், உதவி செயற்பொறியாளர் சிவபிரசாத் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர்.
சாலை அமைக்கும் பணி
தற்போது சாலை அமைக்க தொடக்க நிலை பணிகள் ரூ.1 கோடியே 47 லட்சம் செலவில் செய்யப்பட்டு உள்ளது. அதை பார்த்த கலெக்டர், விரைவாக அங்கு சாலை அமைக்க தடையாக உள்ள பாறைகளை அகற்றி, தரமான சாலையாக அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அங்கிருந்து கத்திரிமலைக்கு உள்பட்ட கிராமங்களான மாதம்பட்டி மற்றும் மலையம்பட்டி கிராமங்களுக்கு கலெக்டர் சென்றார். அங்குள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளிக்கு சென்ற கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். சிறுவர் -சிறுமிகள் கலெக்டரிடம் மிகவும் உற்சாகமாக பேசினார்கள். கலெக்டரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களுடன் உரையாடினார். மேலும், பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்ற இணையவழி பயிற்சியை பார்வையிட்டார். அதுகுறித்து மாணவ-மாணவிகளிடம் கேட்டு, அவர்கள் இணையத்தை பயன்படுத்தி கல்வி கற்பது, திறமைகளை வளர்த்துக்கொள்வது உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறினார்.
பார்வையிட்டார்
நிகழ்ச்சியையொட்டி மலைக்கிராம விவசாயிகளுக்கு பச்சைபயறு, உளுந்து, துவரை, தட்டைப்பயறு உள்ளிட்ட பயிர்களுக்கான விதைகள், உயிர் உரங்கள் வழங்கினார். ரூ.14 லட்சத்து 28 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள 8 ஆட்டுக்கொட்டகைகள், ரூ.1 கோடியே 47 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள சாலைகள், ரூ.60 லட்சம் செலவில் சூரிய சக்தி மின்சார வசதியுடன் கட்டப்பட்டு உள்ள 20 பசுமை வீடுகள், ரூ.11 லட்சத்து 90 ஆயிரம் செலவில் பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்டு உள்ள 7 வீடுகள், ரூ.13 லட்சத்து 79 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கிணறு ஆகியவற்றையும் கலெக்டர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் கலெக்டர் பெற்றுக்கொண்டார். 

Related Tags :
Next Story