கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மறியல்
வேடசந்தூர் அருகே, கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக கூறி அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர்களின் தூண்டுதலே மறியலுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேடசந்தூர்:
மாணவ-மாணவிகள் மறியல்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கே.ராமநாதபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவ-மாணவிகளிடம் தலா ரூ.150 முதல் ரூ.450 வரை கல்வி கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
எனவே கல்வி கட்டணத்தை திரும்ப வழங்கக்கோரியும், பணம் வசூலித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்-கோவிலூர் சாலையில் பள்ளி முன்பு நடந்த மறியலில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
எதிர்கால கல்வி பாதிக்கும்
பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர்.
அவர்கள் மத்தியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகையில், பள்ளியில் ஏதேனும் பிரச்சினை என்றால் பெற்றோர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்டு, மறியலில் ஈடுபட்டால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய நேரிடும். இதனால் மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிக்கப்படும். எனவே படிக்கிற காலத்தில், போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தினார்.
ஆசிரியர்களின் தூண்டுதலே காரணம்
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் கூறுகையில், பள்ளியில் தற்காலிகமாக காவலாளி, துப்புரவு பணியாளர், ஒரு ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பெற்றோர்-ஆசிரியர் கழக ஒப்புதலுடன் 6 முதல் 10-ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
இதேபோல் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.100 பெறப்பட்டது. கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே மாணவ-மாணவிகள் பிரச்சினை செய்கின்றனர் என்றார். மாணவ-மாணவிகளின் மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story