கந்திகுப்பம் அருகே மொபட் மீது வேன் மோதி காவலாளி பலி-தாய், மகள் படுகாயம்
கந்திகுப்பம் அருகே மொபட் மீது வேன் மோதி காவலாளி பலியானார். மேலும் தாயும், மகளும் படுகாயம் அடைந்தனர்.
பர்கூர்:
காவலாளி
பர்கூரை அடுத்த பாகிமானூரை சேர்ந்தவர் சர்தார் (வயது 55). இவர் பத்தலப்பள்ளியில் உள்ள ஒரு மாந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் இவருடைய மகள் நஜ்மா (27), தனது மகள் ஷாகிபாவுடன் (3), சர்தார் வீட்டுக்கு வந்தார்.
சம்பவத்தன்று சர்தார், தனது மகள் நஜ்மா மற்றும் சிறுமி ஷாகிபாவுடன் தான் வேலை பார்க்கும் மாந்தோப்புக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். வழியில் கந்திகுப்பம் அருகே மிட்டப்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பகுதியில் மொபட் மீது எதிரே வந்த வேன் மோதியது.
பலி
இதில் சர்தார், நஜ்மா, ஷாகிபா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அப்போது சிறிது நேரத்தில் சர்தார் சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த நஜ்மா, ஷாகிபாவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார், சர்தார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்திகுப்பம் அருகே மொபட் மீது வேன் மோதிய விபத்தில் காவலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story