வேலூர் கோட்டையில் உள்ள பழமையான கட்டிடங்களை புனரமைக்க நடவடிக்கை


வேலூர் கோட்டையில் உள்ள பழமையான கட்டிடங்களை புனரமைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 27 April 2022 10:52 PM IST (Updated: 27 April 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டையில் உள்ள பழமையான கட்டிடங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் கோட்டையில் உள்ள பழமையான கட்டிடங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் கோட்டை, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வரலாற்றுப் பெருமை கொண்ட வேலூர் கோட்டையில் புகழ்மிக்க ஜலகண்டேஸ்வரர் கோவில், அருங்காட்சியகம் போன்றவை அமைந்துள்ளது. மேலும் கோட்டைக்குள் கண்டி மகால், கிளை சிறை மற்றும் பழமையான கட்டிடங்கள் ஏராளமாக அமைந்துள்ளன.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன்  கோட்டையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஏற்கனவே செயல்பட்டு வந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டிடம், தாலுகா அலுவலக கட்டிடம், வனத்துறை அலுவலக கட்டிடம், கிளைச் சிறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

புனரமைக்க நடவடிக்கை

அந்த பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கவும், கட்டிடங்களில் வளர்ந்துள்ள செடி, கொடி, மரங்களை வெட்டவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். கோட்டையில் உள்ள அனைத்து பழமையான கட்டிடங்கள் குறித்த பட்டியலை தயார் செய்து அவற்றை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கோட்டை கண்காணிப்பாளர் ராமாராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கோட்டையில் உள்ள பழமையான கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் முதல் கட்டமாக எந்தெந்த கட்டிடங்கள் புனரமைக்கப்படவேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
பல கட்டிடங்கள் பழமையை பறைசாற்றும் வகையில் தற்போதும் அமைந்துள்ளது. அந்தக் கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைத்து மீண்டும் மக்கள் பார்வைக்கு விட வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story