விழுப்புரம் நகரில் பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
விழுப்புரம் நகரில் பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதனை வளர்ப்போர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் பொது சுகாதாரத்திற்கு சீர்கேடாகவும், விபத்து ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலரும் புகார் அளித்தனர்.
இதையடுத்து பன்றி வளர்ப்பவர்கள் அதை பட்டியில் அடைத்து வைத்து வளர்க்க வேண்டும் எனவும் மீறி சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்தால் அந்த பன்றிகள் பிடிக்கப்படும் என நகராட்சி சார்பில் எச்சரிக்கை செய்து நோட்டீசு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை நகராட்சி சுகாதார பணியாளர்கள் மருதூர், கே.கே. சாலை, சேவியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகளை பிடிக்க சென்றபோது பன்றி உரிமையாளர்கள், தாங்கள் வளர்த்து வரும் பன்றிகளை பிடிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி பணியாளர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
முற்றுகை
அதன் பின்னர் பன்றிகளை பிடிக்க கால அவகாசம் வழங்கக்கோரி பன்றி வளர்ப்போர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது பன்றி வளர்ப்போருக்கு ஏற்கனவே முன்னறிவிப்பு செய்து நோட்டீசு வழங்கப்பட்ட நிலையில் தற்போது பன்றிகளை பிடிக்கக்கூடாது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பன்றி வளர்ப்போர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு நகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பன்றிகளை பிடிக்கும் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை செய்து தங்களிடமே மீண்டும் பன்றிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் நகராட்சி அதிகாரிகள் பன்றிகளை ஒப்படைக்காமல் விற்று விடுவதாக பன்றி வளர்ப்போர்கள் குற்றம்சாட்டினர்.
பேச்சுவார்த்தை
உடனே கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story