குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய 7 நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய 7 நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய 7 நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தொழிலாளர்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
கொரோனா தொற்றிற்கு பிறகு பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையின்படி, பள்ளியில் இடை நின்றவர்கள் அதிகளவில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவின் பேரில் நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையிலான தொழிலாளர் துறை அலுவலர்கள் குழு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இடைநின்ற குழந்தைகளின் வீட்டு முகவரிக்கு சென்று அவர்கள் பள்ளிக்கு செல்கின்றனரா? அல்லது வேலைக்கு செல்கின்றனரா ? என்பதை விசாரித்து பள்ளிக்கு செல்லாமல் இருப்பவர்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்ப பெற்றோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர் வேலைக்கு செல்கின்றனரா ? என்பது குறித்தும் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் 45 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் ஒரு நிறுவனத்தில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தை தொழிலாளி பணிபுரிந்து வந்ததையும், 6 நிறுவனங்களில் 18 வயதிற்கு உட்பட்ட 6 வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததையும் கண்டறிந்து மொத்தம் 7 சிறுவர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
வழக்குப்பதிவு
மேற்கண்ட 7 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீதும் குழந்தை தொழிலாளர் சட்ட விதிகளின் படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்சமாக அபராதம் ரூ.20 ஆயிரம் விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
Related Tags :
Next Story