ஸ்கூட்டரில் கணவருடன் சென்ற பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கி நகை பறிப்பு புதுச்சத்திரம் அருகே பரபரப்பு
ஸ்கூட்டரில் கணவருடன் சென்ற பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கி நகை பறிப்பு புதுச்சத்திரம் அருகே பரபரப்பு
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற பேரூராட்சி பெண் செயல் அலுவலரை தாக்கி 4 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செயல் அலுவலர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டில் வசித்து வருபவர் சேகர். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ருக்குமணி (வயது 45). இவர் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ருக்குமணியை, கணவர் சேகர் தினந்தோறும் காலை ஸ்கூட்டரில் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விட்டு மாலை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். அதன்படி நேற்று மாலை சேகர் மனைவி ருக்குமணியை காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து ஆண்டகளூர் கேட்டிற்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றார்.
நகை பறிப்பு
அவர்கள் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அடுத்த பாச்சலில் உள்ள தனியார் கல்லூரி மேம்பாலத்தில் இரவு 7.15 மணியளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், ருக்குமணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். இதில் ஸ்கூட்டரில் சென்ற சேகர், ருக்குமணி நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி வந்த மர்ம நபர் ஒருவர், ருக்குமணியை தாக்கி, அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றார்.
பின்னர் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த மற்றொரு நபருடன் ஏறி தப்பி சென்றுவிட்டார். இதில் ருக்குமணி காயமடைந்தார். தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
மேலும் காயமடைந்த ருக்குமணியை புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். செயல் அலுவலரை தாக்கி நகை பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story