கொப்பரை தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.10,590 வழங்கப்படும்


கொப்பரை தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.10,590 வழங்கப்படும்
x
தினத்தந்தி 28 April 2022 12:32 AM IST (Updated: 28 April 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

கொப்பரை தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.10,590 வழங்கப் படும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

மதுரை, 
கொப்பரை தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.10,590 வழங்கப் படும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விற்பனை கூடங்கள்
மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் அரவைக் கொப்பரை தேங்காய் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 590 என்ற குறைந்த பட்ச ஆதார விலை அடிப்படையில் விலையில் கொள்முதல் செய்யப்படும். 
இந்த குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் வருகிற ஜூலை மாதம் 31-ந் தேதி வரையிலான காலத்தில் வாடிப் பட்டி மற்றும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் சாகுபடி செய்ததற்கான அசல் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலுடன் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இப்போதே பதிவுகள் செய்யலாம். பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து மட்டுமே அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்படும்.
வங்கி கணக்கில் வரவு
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட அரவைக் கொப்பரையில் அயல் பொருட்கள் 1 சதவீதத்திற்கு குறை வாகவும் பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப் பரை 10 சதவீதத்திற்கு குறைவாகவும் சுருக்கம் கொண்ட கொப்பரைகள் மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கு குறைவாகவும்  இருக்க வேண்டும். ஆய்வகத் தரப் பரிசோதனை செய்து மேற்கண்ட நியாயமான சராசரி தரத்தின்படி உள்ள அரவைக் கொப்பரை மட்டுமே
கொள்முதல் செய்யப்படும். 
கொள்முதல் செய்யப்பட்ட அரவைக் கொப்பரைக்கான தொகை விவசாயியின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஒரு விவசாயிடம் இருந்து ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 200 கிலோ வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இது தொடர்பாக வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் 9600802823 என்ற எண்ணிலும், மேலூர் பகுதி விவசாயிகள் 9629079588 என்ற எண்ணிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம். 
மேலும் விவசாயிகள் தங்களது வட்டார விற்பனைத்துறை உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலத்திலும் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்று கொள்ளலாம்.
இவ்வாது அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story