திருப்பத்தூர் அருகே சித்திரை திருவிழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருப்பத்தூர் அருகே சித்திரை திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே சித்திரை திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
சித்திரை திருவிழா
திருப்பத்தூர் அருகே உள்ளது கண்டரமாணிக்கம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மாணிக்க நாச்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடைபெறவில்லை. இதையடுத்து இந்தாண்டிற்கான இந்த விழா கடந்த 19-ந்தேதி காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
8-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான நேற்று பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணிக்கு கோவில் அருகே கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மஞ்சுவிரட்டு
மேலும் கண்டரமாணிக்கம் மற்றும் அதன் சுற்றுபுற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். 10-ம் திருநாளான இன்று(வியாழக்கிழமை) மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்த மஞ்சுவிரட்டு கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது 2 ஆண்டுக்கு பின்னர் இந்தாண்டு நடைபெற உள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி மஞ்சுவிரட்டை பார்த்து ரசிக்க உள்ளனர்.
மேலும் இன்று கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் விருந்து உபச்சாரம் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இரவு பூப்பல்லக்கில் சுவாமி மற்றும் அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்க உள்ளது.
Related Tags :
Next Story