சிறுவனை காப்பாற்ற முயன்ற முதியவர் சாவு


சிறுவனை காப்பாற்ற முயன்ற முதியவர் சாவு
x
தினத்தந்தி 28 April 2022 1:19 AM IST (Updated: 28 April 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே களிமேட்டில் தேர்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதில் 10 ஆண்டுகள் பகையை மீறி சிறுவனை காப்பாற்ற முயன்ற முதியவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்;
தஞ்சை அருகே களிமேட்டில் தேர்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதில் 10 ஆண்டுகள் பகையை மீறி சிறுவனை காப்பாற்ற முயன்ற முதியவர் உயிரிழந்தார். 
உறவுக்கார சிறுவன்
ஓரடி அகல இடத்திற்காக, 10 ஆண்டுகள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த நிலையில், உறவுக்கார சிறுவன், 'மாமா' என்று அழைத்த ஒரு வார்த்தைக்காக முதியவர் ஒருவர் உயிரை விட்ட சம்பவம், அந்த கிராமத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
தஞ்சையை அடுத்த களிமேடு கீழத் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது42). விவசாயியான இவருக்கு திருமணமாகி, ராஜ்குமார் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இடப்பிரச்சினை
இவரது சொந்த தாய் மாமன், பக்கத்து வீட்டில் வசிக்கும் சாமிநாதன் (56). விவசாயியான இவரும், முருகேசனும் பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.சாமிநாதன் வீடு கட்டிய போது, இவர்கள் இடையே ஓரடி அகல இடம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2 குடும்பங்களுக்கு இடையே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான சண்டை, சச்சரவு நடந்து வந்துள்ளது. சிலமுறை அடிதடி சண்டை வரை சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அப்பர் திருவிழாவையொட்டி தேர் திருவிழா நடைபெற்றுள்ளது.
பரிதாப சாவு
தேரை தள்ளிக் கொண்டு சென்ற முருகேசன் மகன் ராஜ்குமார், மின் விபத்தில் சிக்கியுள்ளார்.
அப்போது, சாமிநாதன் தேர் திரும்புகின்ற இடத்திற்கு, 100 அடி தாண்டி உள்ள ஒரு டீக்கடையில் நின்றுக் கொண்டிருக்கிறார்.
தனது தந்தை முருகேசன் அழைப்பது போல, அவரது மகன் ராஜ்குமார், சாமிநாதனை பார்த்து "மாமா.." என்று அபயக்குரல் எழுப்பி இருக்கிறார்.
அதைக் கண்டு அதிர்ந்துபோன சாமிநாதன், ராஜ்குமாரை காப்பாற்றச் சென்ற போது, தரை ஈரத்தில் பாய்ந்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சாமிநாதன் உயிரிழந்து விட்டார்.
அவர் காப்பாற்றச் சென்ற ராஜ்குமாரும் பரிதாபமாக இறந்துவிட்டார்.
ஓரடி அகல இடத்திற்காக பல ஆண்டுகள் பகையில் இருந்த குடும்பம், உறவென்று சொல்லி அழைத்த ஒரே காரணத்தினால் உயிரை இழந்த சாமிநாதன் கதையை சொல்லி, அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்கின்றனர்.

Next Story